Monday, March 15, 2021

சதுரங்க ஆட்சி

விதிகள் அறியா
விளையாட்டு தீரத்திலிருக்கும்
என் மகளோடு
எட்டுக்கு எட்டு
கட்டத்தில் சதுரங்கம் ஆடுகிறேன்..

அவளது படைகள் எல்லாம்
அவளது கற்பனைக்குதிரை போலவே
பறக்கின்றன;
பறந்து வந்து தாக்கி விட்டு
புறப்பட்ட இடம் போய்விடுகின்றன..

என் பக்க படைகளுக்கு
எந்த பலமும் இல்லை, ஆனால்
அரசன் வெட்டுப்பட்டாலும்
ஆட்டம் தொடரும் கடைசி
ஆள் உள்ளவரை..

நான் 
நகர்த்த வேண்டிய காயையும், அதன்
நகர்வையும் அவளே
நிர்ணயிக்கிறாள்..

எங்களை கடந்து செல்லும்
என் மனைவி
எந்த ஆட்சியில்
எதிரி நாட்டின் நகர்வுகளை
எம்மால் நிர்ணயிக்க முடியும்
என்ற
எள்ளலோடு சொல்ல...

"மக்களாட்சியில்"
என்கிறான்
என்னுள் இருக்கும்
சிவப்பு சட்டைக்காரன்...

No comments: