Monday, February 10, 2020

வேள்பாரி

வேளிர்கோ  பாரி
வேளிர்க்கோ பாரி ?
இல்லை ..
வேலனுக்கும் பாரி
நீலனுக்கும் பாரி
வேழத்திற்கும் பாரி 
சோளத்திற்கும் பாரி

கானத்திற்கும் பாரி
கானகத்திற்கும் பாரி
காவலுக்கும் பாரி

தோள்வலிவுக்கும் பாரி - எதிரியின்
தோள்வலிக்கும் பாரி - கொடை
அளிக்கும் பாரி
வளிக்கும் பாரி 
வேளைக்கும் பாரி

நீருக்கும் பாரி
வேருக்கும் பாரி  - சூழ்ச்சியை
வேரறுக்கும் பாரி
வானருக்கும் பாரி
பாணருக்கும் பாரி

கொடிக்கும் பாரி
செடிக்கும் பாரி - அறுபதாங்
கோழிக்கும் பாரி
பாலிக்கும் பாரி

நெல்லுக்கும் பாரி
சொல்லுக்கும் பாரி

அறத்திற்கும் பாரி
மறத்திருக்கும் பாரி
மரத்திற்கும் பாரி
மடுவுக்கும் பாரி

காலத்திற்கும் பாரி
காலம்பனுக்கும் பாரி
கபிலருக்கும் பாரி
ஆதினிக்கும் பாரி

தேக்கனுக்கும்  பாரி
தெவிட்டாதவன் பாரி
அலவனுக்கும் பாரி
அனைவருக்கும் பாரி..

என் ஓவியங்கள்

Sunday, February 9, 2020

கவனிதை

ஆதவன் தன் அகங்காரத்தை குறைத்துக்கொண்டு அன்போடு ஆரஞ்சு பூக் கூடையை வானெங்கும் விசிறி இருந்த அந்தி நேரம். அந்த பெண்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்காக களை கட்டியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ட்யூப் லைட்கள் கட்டப்பட்டு இருந்தன. மைதானத்தின் நடுவில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சரியான நேரத்திற்கு கல்லூரி முதல்வர் விழாவினை தொடக்கி வைத்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மாணவர்களின் கமெண்ட்டும் கைதட்டலும் அரங்கை அதிர செய்து கொண்டு இருந்தன. கல்லூரி முதல்வர், பல பிரிவுகளில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கொண்டு இருந்தார். அடுத்த பிரிவு  "கவனிதை" என்று சொன்னதும், மாணவர்கள் அனைவரும் அமைதியாகி அந்த விருதின் முக்கியத்துவத்தை காட்டினர்.

"விழிப்புணர்வு, கவன ஒருங்கிணைப்பு  என்பது எப்பொழுதும் அனைவருக்கும் மிகவும் முக்கியம். ஷெர்லாக் ஹோல்ம்ஸோ, சூஃபி ஞானியோ, சாதாரண மனிதர் எவராயினும் கவனக்குவிதல் என்பது அனைவரும் கைக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதனடிப்படையில் நம் கல்லூரி இந்த விருதினை வழங்குகிறது. இந்த விருதிற்கு தகுதியான பல மாணவிகள் போட்டியிட்டாலும், முதல் பரிசை வென்ற மாணவியின் கவனக்குவிதல் மற்றவரை விட தனித்துவமானது.  கடந்த ஒரு வாரத்தில் ஒரு ஆசிரியை அணிந்து வந்த தோடில் இருந்த கற்களின் எண்ணிக்கை  பிபோனிச்சி (fibonnici) தொடரின் அடிப்படையில், அதாவது 1, 1, 2, 3, 5, 8, 13 என்ற வரிசையில்  இருந்ததை சரியாக கவனித்து முதல் பரிசை வெல்கிறார். அவர் 'கபிலவாணி'" என்று முதல்வர் சொன்னதும், அனைவரின் கரவொலி விண்ணை பிளந்தது. கபிலவாணி பரிசை வாங்க மேடையேற, அவள் செல்போன் அழைத்தது. திரையில் "நீலேஷ்" என்று ஒளிர்ந்திட அழைப்பை துண்டித்து விட்டு அனைவரின் கரகோஷங்களுக்கிடையில் பரிசை வாங்கினாள்.

மறுநாள்,  கபிலவாணி தன் கசின் நீலேஷுக்கு போன் செய்து "என்னடா நேத்து போன் பண்ணுன ??" என்று கேட்டாள்.  அவன் "என்னோட கூட படிக்கிற பொண்ணு , ரெம்ப பிரண்ட்லியா பழகுறா.. ஆனா லவ் பண்றாளான்னு தெரியல. ஒரு நல்ல நட்பை இழந்துடுவோமோன்னு ப்ரொபோஸ் பண்ணவும் பயமா இருக்கு. நீ தான் பெரிய கவனிதை ஆச்சே.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா" என்றான்.

ஒரு நாள் நீலேஷ் கல்லூரிக்கு கபிலவாணி சென்றாள். நீலேஷ் அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான். அவள் "பீலி.. மயிற்பீலி" என் பெயர் என்றாள். அவளை ஆச்சரியமாக பார்க்க, தன் தந்தை தமிழ் ப்ரொபஸர் என்று தன் பெயருக்கு விளக்கம் அளித்தாள். மூன்று பேரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தில் இருந்து வாசல் வரை நடந்து வந்தனர். வழியில் பல மேன்ஹோல்களின் இரும்பு மூடியின் மீது நடக்க அது "தட்.. தடக்" என ஒலி எழுப்பியது. சாலையை அடைந்தவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பீலி அவர்களிடம் விடை பெற்று சென்றாள்.

அவள் போன பிறகு கபிலவாணி "கைய குடுடா" என்று மகிழ்ச்சியில் கைகுலுக்கினாள். அவன் ஒன்றும் புரியாமல் முழிக்கவே, "நீ அவளிடம் தாராளமாக ப்ரபோஸ் பண்ணலாம்" என்றாள். அவன் திகைத்து நிற்க, "அவள் உன்னை விரும்புவதாக ஏற்கனவே சொல்லிவிட்டாள்" என்றாள். "எப்போ? எப்படி?" என்றான் ஆச்சரியம் விலகாமல். "பீலி, மேன்ஹோல் மூடியில் நடக்கும்போது வரும் சத்தத்தில், மோர்ஸ் கோடில், அதாவது தந்தி குறியீட்டில் அதைச் சொன்னாள்" என்று  சொல்லி தான் "கவனிதை" என்பதை மற்றொரு முறை நிரூபித்தாள்..

.. / .-.. --- ...- . / -. . . .-.. . ... ....