Friday, March 5, 2021

இரவாதன் இரங்கற்பா

 இரவாதனே !

இறவாதவனே !!


தந்தையோ  குடிமுடியன். 

படைத் தலைவன்

பகிரி வென்ற 

தேக்கன். 

அடவிக்கு 

அடங்காத 

வேட்டூர் பழையன் 

அவன் சுற்றம். 

அடவி ஈக்கு 

அதிராத 

உதிரன் 

படைத்தோழன்.  

மரமோ மறமோ 

அறத்தை 

மூச்சாகக்  கொண்ட பாரி 

அவன் தலைவன். 

இத்துணைப்  பேர் இருந்தும் 

அவன் துணை 

ஆகவில்லை ஒருவரும்...

அவனுக்குத்  துணை 

தேவையேயில்லை... 


அவன் 

ஈர்வாள் பட்டு - பகைவர்  

ஓர்வாள் ஆனது 

ஈர்வாள்! 

சூடியூர்த்  தேரை - சுக்கல் 

சுக்கலாக உடைக்கும் 

அவன் மூவிதழ்வேள்! 

இந்தச் சூலூர்காரன் 

களம் வந்தால் 

சுழன்றடிக்கும் 

சூறாவளியும் 

செத்துப்போகும் - இவன் 

அம்பாலே! 

பகலவனும் 

பதறிப்போவான் 

பகழி அம்பாலே - இவன் 

கழுமுள் சாட்டையிலே 

கரம் சிரம் இழந்தவர் 

கணக்கில்லை - வீரத்திலே 

புராணத்து அபிமன்யுவிற்கு 

இவன் இளைப்பில்லை!! 


இத்துணை 

சிறப்பிருந்தும் 

மாண்டானே - அது 

கொடும் விதியா ??

இல்லை, இல்லை 

மதியிழந்த ஈனர்களின் 

கோரச் சதியே...

 

இரவாதனே !

இறவாதவனே !!

No comments: