Sunday, February 14, 2021

பாஞ்சாலி கண்ட பாரதி

இன்று (சென்னை) 

கலவன் தன்னிடமுள்ள தங்கத்தையெல்லாம் உருக்கி வான் முழுதும் மெழுகி இருந்த மாலை வேளை.  அந்த நகரின் மையத்தில் இருந்த "தமிழ்ப் பூங்கா" வின் ஒரு கோடியில் யாரும் தொந்தரவு செய்யாத வகையில் அமர்ந்து காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தான் அவன். அந்தி சாய்ந்து இருளத் தொடங்கியவுடன், அந்த பூங்காவின் வாட்ச்மேன் வந்து அவனைப் பார்த்து சினேகமாய் சிரித்து விட்டு, "சுபா தம்பி,  கிளம்பலையா? இருட்டிடுச்சு" என்றார். "கிளம்பணுண்ணே.." என்று சொல்லிக்கொண்டே மும்முரமாய் எழுதிக் கொண்டு இருந்தான்.  "இந்த காலத்து பசங்க எல்லாம் பொழுது சாஞ்சவுடனே, பாட்டிலும் கையுமா போதை ஏத்திக்க போயிடுறாங்க.. ஆனா நீங்க மட்டும் விதிவிலக்கு தம்பி" என்றார் அந்த வாட்ச்மேன். அதற்கு "அண்ணே! பாட்டிலை விட தமிழ்ப் பாட்டில் போதை அதிகம்" என்றான் சிரித்துக்கொண்டே. "தமிழ்ல கவிதை எழுதுற உங்ககிட்ட  பேசி என்னால ஜெயிக்க முடியுமா??   சரி தம்பி!  கிளம்புங்க டைம் ஆயிடுச்சு" என்று சொல்லிக்கொண்டே அந்த இடம் விட்டு நகர்ந்தார்.

அவன் சிறிது நேரத்தில் கிளம்ப முயலும்போது, அவனுக்கு பின்னால் இருந்த செடிகளுக்கு பின்னே ஏதோ சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்க்க அந்த செடிகளுக்கு பின்னே போனான். அங்கே சிறிது நேரத்தில் பலவித வித்தியாசமான வெளிச்சம் வந்து நின்றவுடன், ஒரு மனிதன் வித்தியாசமான உடையுடன் திடீரென்று தோன்றினான்.

அந்த மனிதனை நெருங்கி "யார் நீங்க? எங்க இருந்து வர்றீங்க?? எப்படி இங்க வந்தீங்க??" எனக் கேட்டான் சுபா. அதற்கு அவன் "நான் ஒரு டைம் ட்ராவலர், அதாவது காலப் பயணம் செய்பவன். எதிர் காலத்தில் இருந்து வருகிறேன்" என்றான். இதை சுபா நம்பாமல் பார்க்கவே, அவனை அழைத்துக் கொண்டு சுமார் பதினைந்து நிமிடங்கள் காலத்தில் பின்னால் சென்று, சுபாவுக்கும் வாட்ச்மேனுக்கும் நடந்த உரையாடலை சுபாவை தன் கண்களாலேயே பார்க்க வைத்தான். அதன் பின்னே சுபா அவனை நம்பினான். சுபா தன்னை அறிமுகம் செய்துகொண்டு அந்த மனிதனின் பெயரைக்  கேட்டான். அதற்கு அவன் எங்கள் காலத்தில் பெயர் முக்கியம் இல்லை, அனைவருக்கும் unique number (தனித்த எண்) கொடுத்துவிடுவார்கள். அந்த எண்ணைக் கொண்டே அனைவரும் அடையாளப்படுத்தப்படுவார்கள் என்றான். மேலும் தனது எண் 9753124680 என்றான்.

நம்பர்லாம் சொல்லி உங்களை கூப்பிட முடியாது. நான் ஒரு பேர் வைக்கிறேன் என்று கூறி "காலயவனன்" என்று பேர் வைத்தான். அதற்கு அவன் காரணம் கேட்க,  "நீங்க காலப் பயணம் (டைம் ட்ராவலர்) செய்றவர், அது மட்டுமில்லாம பாக்க அழகா இருக்கீங்க அதான்" என்றான் சுபா. சுபா எதிர்காலத்தைப் பற்றி பல கேள்விகள் கேட்க எதை சொல்லலாமோ, அதை மட்டும் சொன்னான் காலயவனன். "உங்க சாப்பாடு எல்லாம் எப்படி?" என்று சுபா கேட்க, எங்கள் உடை நானோ டெக்னாலஜியால் உருவானது. அதனால் எங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை காற்றிலிருந்தும் சூரிய ஒளியில் இருந்தும் தயாரித்துக் கொள்ளும் என்றான். சுபா ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்து "அப்படின்னா சாப்பாட்டுக்காக சண்டையே வராதுல்ல!!  சாப்பாட்டுக்கு சண்டையில்லைனா இங்க முக்கால்வாசி சண்டை இருக்காது" என்றான் சுபா.  "ஆமா அது மட்டுமில்லாம, நாங்க இயற்கையை மதிச்சு அதோட இணைஞ்சு வாழுவோம்" என்றான் காலயவனன்.  

"ச்சே.. கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு" என்றான் சுபா. அப்பொழுது குப்பை காகிதம் ஒன்று பறந்து வந்து அவன் மேல் படவே, எரிச்சலடைந்தான் சுபா. "ஆமா, இந்த குப்பையெல்லாம் எப்புடி சமாளிக்கிறீங்க" என்றான் அவன். "எந்தப் பொருள் வாங்கினாலும் தொழில்நுட்பத்தின்(நானோ டெக்னாலஜி)  உதவியால், அதனுடைய atomic level-ல் (அணு அளவில்), அதை வாங்குபவரின் நம்பரை அதில் என்டர் செய்து விடுவார்கள் . அதனால் அந்த பொருளின் பயன்பாடு முடிந்தவுடன் அதை சரியாக குப்பையில் சேர்த்துவிடுவார் அவர். Environment department (சுற்றுச்சூழல் துறை), அதில் உள்ள அவரின் எண்ணை அழித்துவிடுவார்கள், மேலும் அதை ரீசைக்கிள் பண்ணிவிடுவார்கள்" என்றான். 

ஆச்சரியத்தோடு அதை எல்லாம் கேட்டுக் கொண்டான் சுபா.  அப்பொழுது கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று கோஷம் போட்டுக்கொண்டே சிலர் சாலையில் சென்றனர். அதைப் பார்த்துவிட்டு, "இந்த கருப்பு பண பிரச்சனை அப்பவும் இருக்கா?" என்றான் சுபா. இதை சிரித்துக்கொண்டே கேட்ட யவனன்.  

"எங்க காலத்தில் 95% Electronic transaction (மின்னணு பரிவர்த்தனைகள்) தாம், மீதமுள்ள 5% மட்டுமே காகிதப் பண பரிவர்த்தனைகள். அதுவும் அந்தப் பண நோட்டுகள் Expiry (காலாவதி) தேதியோடு வரும். அந்த குறிப்பிட்ட தேதிக்குபின், அது வெறும் காகிதம் மட்டுமே. அதையும் சரியாக குப்பைக்கிடங்கில் சேர்க்க வேண்டும். எந்த குப்பையாக இருந்தாலும் அதை குப்பைக்கிடங்கில் சேர்க்கவிட்டால், அபராதம் ரொம்பவே அதிகமாக இருக்கும். அதனால குப்பை என்ற பேச்சுக்கே இடமில்லை எங்க காலத்தில்" என்றான் காலயவனன்.

"அது சரி... இந்த கதாசிரியர், இக்கதைக்கு பாஞ்சாலி, பாரதின்னு பேரு வச்சுட்டாரு. இதுவரை 6, 7 பாரா தாண்டியும் அது சம்பந்தமா எதுவுமே கேட்கல. படிக்கிறவங்க கடுப்பாக போறாங்க" என்றான் தொடர்ந்து..

அதற்கு சுபா "இந்த கதாசிரியரவிட நீங்க ரொம்ப அவசரக்குடுக்கையா இருக்கீங்களே" என்றான் சிரித்துக்கொண்டே.

"என்னோட பேர் சுபா-ன்னு சொன்னேன்ல, அது சுப்பிரமணிய பாரதியோட சுருக்கம் தான். எனக்கு பெற்றோர் வச்ச பேர் வேற. எனக்கு பாரதியாரை அவ்வளவு புடிக்கும், அதனால என்னோட பேர சுபா-ன்னு மாத்திக்கிட்டேன். அதோட, உங்க உதவியோடு டைம் ட்ராவல்  பண்ணி பாரதியை பாக்க முடிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவேன் " என்றான் சுபா.

"சரி, போகலாம் என்றான்." காலயவனன். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் சுபா. இருவரும் சேர்ந்து காலத்தில் பின்னோக்கி பயணித்து பாரதியை பார்க்கச் சென்றனர்.


நூறு ஆண்டுகளுக்கு முன்(பாண்டிச்சேரி)

சுபாவும் காலயவனனும் பாரதியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றனர். இவர்களது உடையைப் பார்த்து ஆங்கிலேய பிரதிநிதிகளோ என்று அங்கிருப்பவர்கள் எல்லாம் அச்சம் கொள்ள, அவர்களை பாரதி அமைதிப்  படுத்தினார். அவர்களது பார்வையில் வஞ்சம் இல்லை ஆதலால் அவர்கள் நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள் என்றார். சுபாவிற்கு பாரதியைப் பார்த்த சந்தோஷத்தில் கால் தரையிலேயே இல்லை. மற்றவர்கள் எல்லாம் சென்ற பிறகு இவர்கள் இருவரையும் எதற்காக என்னைப் பார்க்க வந்தீர்கள் என்று பாரதி கேட்டார்.

இவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் இருந்து வருவதாக சொல்லவும், சற்றே நம்பாமல் இவர்களைப் பார்த்தார். உடனே சுபா "நீங்கள் பாஞ்சாலி சபதம் எழுதி இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்க, பாரதி "அதை நான் இப்பொழுது தான் எழுதவே ஆரம்பித்து இருக்கிறேன்." என்று ஆச்சரியத்தோடு சொன்னவர், பின் இவர்கள் சொல்வதை நம்பினார். சுபா உடனே "பார்த்தீர்களா, இதனால் தான் இவரை மகாகவி என்று கொண்டாடுகிறோம்" என்று காலயவனனிடம் காதோடு சொன்னான்.

வெகுநேரம் பாஞ்சாலியைப் பற்றி  பாரதி பேசிக்கொண்டிருந்தார். அதில் பெண் விடுதலை பற்றி உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது சற்றே நிதானித்து, எப்பொழுது தேசம் விடுதலை பெறும் என்று கேட்டார். சுபாவும் காலயவனனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபின், நாடு விடுதலையான நாளைச் சொன்னவுடன், 

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" 

என்று உணர்ச்சி பொங்கப் பாடினார்.

மீண்டும் பாஞ்சாலி பற்றி பேசும்போது, சுபா "நீங்கள் பாஞ்சாலியை பார்க்க விரும்புகிறீர்களா??" என்று கேட்க, "என்ன? பாஞ்சாலியை பார்க்க முடியுமா??" என்று ஆச்சர்யத்தோடு கேட்டார். 


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் (அத்தினாபுரம்)

சுபா, பாரதி, காலயவனன் மூன்று பேரும் காலத்தில் பின்னோக்கி பயணித்து அத்தினாபுரம் வந்தனர். அந்த நாடே உற்சாகத்தில் மிதந்து கொண்டு இருந்தது. காரணம், பாண்டவர்கள் மீண்டும் அரண்மனை வந்ததும் மற்றும் அவர்கள் திரௌபதியை மணம் முடித்து வந்ததும் என்று அங்குள்ள மக்கள் பேச்சில் இருந்து அனைவரும் தெரிந்து கொண்டனர்.  பாரதிக்கு வடமொழி தெரியுமாதலால் அவர் எழுதிய வடமொழிக் கவிதையோடு அரண்மனை சென்றனர். போகும் வழியில் சுபா சொன்னான் "பாரதிக்காக பாஞ்சாலியை பார்க்கப் போறோம். ஆனால் பீமன் கண்ணிலோ, கிருஷ்ணன் கண்ணிலோ படாமல் திரும்பி வரவேண்டும். மீறிப் பட்டுவிட்டால், நம் கதை என்ன ஆகுமென்று தெரியாது."

மூவரும் அரண்மனைக்குச் சென்றபோது, தருமனும் பாஞ்சாலியும் அரியணையில் இருந்தனர். பாஞ்சாலி பாரதியைப் பார்த்தாள். பாரதியின் பாடலை அனைவரும் ரசித்தனர். தருமன் இவர்களைப் பார்த்து "எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்?" என்று கேட்க. பாரதி நடந்தவற்றைக் கூற, அனைவரும் சிரித்தனர். சிலர் இவர்களை துரியோதனனின் ஆட்களோ என்று சந்தேகத்தோடு பார்த்தனர். சில வீரர்கள் அவர்களை சூழ முயல, தருமன் அவர்களைத் தடுத்தான். "இவர்கள் சொல்லில், கண்ணில் சத்தியமே உள்ளது. எனவே அவர்கள் சொல்வது உண்மை" என்றான். 

அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன், "இவர்கள் நமது சிறப்பு விருந்தினர்கள், இவர்களை அந்தப்புரம் அழைத்து செல்வோம்" என்றார். சுபா பயந்து "இல்லை, நாங்கள் வந்த வேளை  முடிந்து விட்டது. நாங்கள் கிளம்புகிறோம்" என்றான். கிருஷ்ணன் அவர்களைக் கட்டாயப்படுத்தி அந்தப்புரம் அழைத்துக்கொண்டு போனார். அங்கு அர்ச்சுனன் இருந்தான். அவையில் நடந்தது அனைத்தும் அறிந்திருந்தான். கிருஷ்ணனும் அர்ச்சுனனும் கண்ணாலேயே ஏதோ பேசிக்கொண்டனர். இவர்களை வரவேற்று, அனைவருக்கும் மோர் தர சொன்னான் அர்ச்சுனன். காலயவனன் மட்டும் வேண்டாம் என்றிட, சுபாவும் பாரதியும் மோரைக் குடித்த கொஞ்ச நேரத்தில் மயங்கிவிட்டனர். அதைப் பார்த்து "ஏன் இவர்கள் மயங்கிவிட்டனர்?" என்று அர்ச்சுனனை  காலயவனன் கேட்க,  கிருஷ்ணன் அவனருகில் சென்று அவன் தோளில் கை வைக்க அவனுடைய நானோ டெக்னாலஜி உடை அவனையும் மயக்கமடையச் செய்தது.

அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் "இவர்கள் உண்மையிலேயே எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள் தானா மாதவா?" என்றான். கிருஷ்ணன் உண்மை தான் என்றான். "அப்படியென்றால் இவர்களை என்ன செய்வது? எப்படி அவரர் காலத்திற்கு அனுப்புவது?" என்றான் விஜயன். கிருஷ்ணன் "நீ தான் ஒரு உபாயம் சொல்லேன் பார்த்தா.." என்றார். "உன் மாயையால் இவர்களை அரண்மனை வராமல் செய்து விட்டால் என்ன?" என்றான் அர்ச்சுனன். "அபிமன்யூ மாதிரி யோசிக்காதே" என்றார் கண்ணன். "அது யார் கண்ணா?" என்றான் அர்ச்சுனன். "அவன் இன்னும் பிறக்கவில்லை, காலம் வரும்போது நீ தெரிந்து கொள்வாய். வேறு ஏதேனும் வழி இருந்தால் சொல்" என்றார். அதற்கு அர்ச்சுனன் "இவர்களின் காலப் பயணத்தையே  தடுத்து விட்டால் என்ன? இவர்கள் இங்கு வரப் போவதும் இல்லை, மயங்கப் போவதும் இல்லை" என்றான். "இப்பொழுது தான் நீ உன் அளவிற்கு சரியான யோசனை கூறி உள்ளாய்" என்றார் கிருஷ்ணன். "ஆனால் கண்ணா, நீ என்ன செய்யப் போகிறாய்?" என்றான் அர்ச்சுனன்.

"இந்தக் கதாசிரியருக்கு நேரம் இருந்ததால் தானே இதை எழுதினான். அவன் மேலாளர் இவனுக்கு அதிகமான வேலை கொடுத்துவிட்டால், அவன் இந்த கதையே எழுத மாட்டான் அல்லவா? அதற்கு என்ன செய்யவேண்டுமோ? அதை செய்யப்போகிறேன்" என்றார் கிருஷ்ணன் புன்னகையோடு.

ஆசிரியர் குறிப்பு:

ஆதலால் நான் இக்கதையை எழுதவும் இல்லை நீங்கள் படிக்கவும் இல்லை.. 

😆😝😆