Monday, March 15, 2021

வெண்பா

புலவர்க்கு புலி
புரவலர்க்கு களி
ஆசிரியருக்கு கிளி
மாணவர்க்கு கிலி
அவ்வைக்கு கழி
வள்ளுவனுக்கு மொழி
புகழேந்திக்கு அடைமொழி..

நிலா

வானின் நிலைமாறி
வருங்கால் உருமாறி

அல்லியின் பதி மா(தி)ரி - கடல்
அலையின் உரு மாற்றி

மேகத்தின் பரு மா(தி)ரி
கவிஞர்க்கு கரு மா(தி)ரி

விடலையர்க்கு அம்பு மா(தி)ரி
காதலர்க்கு தூது மா(தி)ரி

கடலின் குழந்தை மா(தி)ரி
சகலரின் மதி மா(தி)ரி...

மானுடம் - மாடினம்

நுரை வழிய
உணவை
அசைபோடுவது
மாடினம்..

நரை வழிய
நினைவை
அசைபோடுவது
மானுடம்..

சதுரங்க ஆட்சி

விதிகள் அறியா
விளையாட்டு தீரத்திலிருக்கும்
என் மகளோடு
எட்டுக்கு எட்டு
கட்டத்தில் சதுரங்கம் ஆடுகிறேன்..

அவளது படைகள் எல்லாம்
அவளது கற்பனைக்குதிரை போலவே
பறக்கின்றன;
பறந்து வந்து தாக்கி விட்டு
புறப்பட்ட இடம் போய்விடுகின்றன..

என் பக்க படைகளுக்கு
எந்த பலமும் இல்லை, ஆனால்
அரசன் வெட்டுப்பட்டாலும்
ஆட்டம் தொடரும் கடைசி
ஆள் உள்ளவரை..

நான் 
நகர்த்த வேண்டிய காயையும், அதன்
நகர்வையும் அவளே
நிர்ணயிக்கிறாள்..

எங்களை கடந்து செல்லும்
என் மனைவி
எந்த ஆட்சியில்
எதிரி நாட்டின் நகர்வுகளை
எம்மால் நிர்ணயிக்க முடியும்
என்ற
எள்ளலோடு சொல்ல...

"மக்களாட்சியில்"
என்கிறான்
என்னுள் இருக்கும்
சிவப்பு சட்டைக்காரன்...

Thursday, March 11, 2021

தைப்பூச திருநாள்

ஆறுதலை வேண்டி
ஆறுதலை நாடி நின்றது
நூறுதலை...

கமல நயனனும்
கமல சயனனும்
கோரினர் வேண்டுதலை
அசுரனின் கோறுதலை...

விடைஏறும் எம்மான்
விடாய் தீர
திறந்தான் 
மூன்றாம் கண்
தோன்றாக் கண்...

கண் கண் தோன்றியது
நெருப்புப் பொறி - அது
வெற்றியின் திரி
அசுரனைக் கோறும் பொறி...

பிறந்தான் முருகன்
ஆண் மகன்
ஆண்மகன்
ஆணழகன்...

தோன்றினான் 
ஆறு வடிவில்
நம் கறைகளை, குறைகளை 
களையும்
ஆறு வடிவில்...

ஆறின் பலன்
அணையில் உச்சம்.
ஆறு உருவை
அணைத்து
ஆறு முகமாக்கினாள்
அன்னை...

வல்லசுரனனைக் 
கொல்லாது
வாகனமாக்கி
வானவரைக் காத்தான்
வடிவேலன்
கார்த்திகேயன்...

ஓம் முருகா...
ஓம் முருகா...

மனமே அவனை நினை

மண்ணில்
மகவாய் வந்தநாள் முதல்
மனமொரு ஈரத்துணி.

உலக வழக்கமெனும் காற்று
உலர்த்த உலர்த்த அது
உயரப் பறக்க எண்ணும்.

அற நினைவும்
அவன் நினைவும்
அதைக் காக்கும் க(ரு/வ்)வி

உலர உலர, அவனையது
உணரவேண்டும் - அன்றேல்
அந்தோ பரிதாபம் - அது
நூலறுந்த காத்தாடி
கை தவறிய கண்ணாடி

அனுதினமும் அவனை நினை
அதுவே உனைகாக்கும் அணை

Wednesday, March 10, 2021

சித்தர் பாடல்

மகிழ்ச்சியோ 
மயக்கமோ 
மனதின் நிலைப்பாடடா... 

மண்ணையோ கல்லையோ கூட்டி வைத்து 
விண்ணவனை அதிலிறக்கி 
வேண்டுவன கேட்பதெல்லாம் 
வேடிக்கை விளையாட்டடா... 

மனதுக்குள்ளே 
மகேசனை 
கண்டுகொண்டால் 
மந்திரமும் வெறும்
பாட்டு தானடா...

Tuesday, March 9, 2021

சிலேடை

ஆதியிலே கூழ்மம் 
நீராலே வலுப்பெறும் 
ஆவி கொண்டு வளரும் 
இடையிடையே பரிசோதிக்கப்படும் 
தலைகீழாக வெளிவரும் 
பார்ப்பவரை மகிழச்செய்யும் 
குழந்தையாகும் இட்லி...


நினைக்கையில் திகைக்க வைக்கும்!
தெளிந்த பின் 
நகைக்க வைக்கும்!
தயார்படுத்திக் கொண்டால்
அருள வைக்கும் - இல்லையேல்
மருள வைக்கும்!
அஃதில்லேல் 
அடுத்த நிலை அடைய இயலாது
ஆம், தேர்வும் மரணமும் ஒன்றேயாம்...


பச்சையாக
புசிக்கலாம்
கொதித்த பின் ஆடை நீக்கி
உண்ணலாம்
குத்திய பின்னும்
கொள்ளலாம்
அமுதென்று சுட்டப்பெறும்
பாலும் நெல்லும்
ஒன்றே காண்


இலக்கை நோக்கி செலுத்த வைக்கும் 
எதிரணியை சாய்க்க வைக்கும் 
தனது அணியை காக்க உதவும் 
சமரினில் வெல்ல வைக்கும் 
செயல்படையில் ஓசை எழுப்பும் 
சும்மா இருக்கையில் தோளில் தொத்தும் 
வில்லாகும் பூப்பந்து மட்டை....

ஹைக்கூ

கணநேரத் தாமதம்..
நிதானமா??
சோம்பலா??

#ஹைக்கூ

Friday, March 5, 2021

இரவாதன் இரங்கற்பா

 இரவாதனே !

இறவாதவனே !!


தந்தையோ  குடிமுடியன். 

படைத் தலைவன்

பகிரி வென்ற 

தேக்கன். 

அடவிக்கு 

அடங்காத 

வேட்டூர் பழையன் 

அவன் சுற்றம். 

அடவி ஈக்கு 

அதிராத 

உதிரன் 

படைத்தோழன்.  

மரமோ மறமோ 

அறத்தை 

மூச்சாகக்  கொண்ட பாரி 

அவன் தலைவன். 

இத்துணைப்  பேர் இருந்தும் 

அவன் துணை 

ஆகவில்லை ஒருவரும்...

அவனுக்குத்  துணை 

தேவையேயில்லை... 


அவன் 

ஈர்வாள் பட்டு - பகைவர்  

ஓர்வாள் ஆனது 

ஈர்வாள்! 

சூடியூர்த்  தேரை - சுக்கல் 

சுக்கலாக உடைக்கும் 

அவன் மூவிதழ்வேள்! 

இந்தச் சூலூர்காரன் 

களம் வந்தால் 

சுழன்றடிக்கும் 

சூறாவளியும் 

செத்துப்போகும் - இவன் 

அம்பாலே! 

பகலவனும் 

பதறிப்போவான் 

பகழி அம்பாலே - இவன் 

கழுமுள் சாட்டையிலே 

கரம் சிரம் இழந்தவர் 

கணக்கில்லை - வீரத்திலே 

புராணத்து அபிமன்யுவிற்கு 

இவன் இளைப்பில்லை!! 


இத்துணை 

சிறப்பிருந்தும் 

மாண்டானே - அது 

கொடும் விதியா ??

இல்லை, இல்லை 

மதியிழந்த ஈனர்களின் 

கோரச் சதியே...

 

இரவாதனே !

இறவாதவனே !!