தேக்கனும் வாரிக்கையனும் தட்டியங்காட்டைப் பற்றி அறிந்து வர கானவர் தலைவனைப் பார்க்க சென்றனர். கானவர் தலைவன் இகுளிக்கிழவன் தட்டியங்காட்டை சாமேடு என்றும் அங்கு செங்காவி நிற ஓணான் மட்டுமே இருக்கும் என்று சொன்னார். ஆதலால் அங்கே யானைப்போரை நடத்தக் கூடாது என்றார். இல்லையேல் அவை அழிந்து விடும் என்றும் அப்படி நடந்தால் காக்காவிரிச்சியின் முட்டைகள் அழிக்கப்படாமல் இந்நிலமெங்கும் காக்காவிரிச்சி இனம் பெருகும் என்று அஞ்சியவாறே சொன்னார்.
அதற்கு தேக்கன், செங்காவி நிற ஓணான் அழியாமல் யானைப் போரை நடத்தினால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே எனக் கேட்க, இகுளிக்கிழவன் "அது எப்படி சாத்தியம்?" என்று வினவினார். தேக்கன் தான் பொதினிக்கு சென்றிருந்த போது பூனையை வைத்துக் கொண்டே எலிகளுக்கு உணவளித்தனர். ஆனால் பூனை அசையவே இல்லை. இது எப்படி என்று பொதினி மக்களை கேட்டபோது, "பூனை வணங்கி" மூலிகையை பற்றி விவரித்தனர். தான் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருக்க, இதை விட எந்த ஓணான் இனத்தையும் சில நாழிகை மயக்கமுறச் செய்யும் "கரத்துஞ்சி" மூலிகை பற்றி சொன்னபோது நான் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைந்தேன் என்றார். அம்மூலிகையை வைத்து செங்காவி நிற ஓணான்களை மயக்கமுற்ற செய்து பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுவோம். பின்பு யானைப்போரை நடத்துவோம் என்றார்.
அதற்கு இகுளிக்கிழவன், அது தரையினடியில் இரண்டு அடி ஆழத்தில் வளை அமைத்து வாழும் தன்மையுடையது. அதை எப்படி வெளிக்கொணர முடியும் என சந்தேகப்பட்டார். வாரிக்கையன், எங்கள் கூவல்குடிக்காரன் பத்தடி ஆழத்திலிருக்கும் கருங்கற்தலையனுக்கே செய்தி சொல்லுவான், இரண்டடி எல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை என்றான். இகுளிக்கிழவனை வணங்கி இருவரும் விடைபெற்றனர்.
தேவையான தகவல்களோடு வந்து தேக்கனும் வாரிக்கையனும் பாரியிடம் அனைத்தையும் விவரித்தனர். முறியன் ஆசான் உதவியோடு அவரின் சீடர்கள் கரத்துஞ்சி மூலிகையை எடுத்து வந்தனர். தட்டியங்காட்டில் உள்ள செங்காவி நிற ஓணானை கூவல்குடி உதவியோடு வெளிவரச்செய்து, கரத்துஞ்சி மூலிகை மூலம் மயக்கமுற்ற செய்து மற்றொரு பாதுகாப்பான இடத்தில் அனைத்து ஓணான்களையும் விட்டனர்.
தட்டியங்காட்டில் முதல் நாள் போர் ஆரம்பானது. பறம்பு வீரர்கள் அனைவரும் முழு வேகத்தோடு போர் புரிய ஆயத்தமாக இருந்தனர். கபிலர் நிலைமான் கோல்சொல்லியின் கண்காணிப்பு பரண் நோக்கி செல்லும்போது, பறம்பு தரப்பில் பத்துக்கும் குறைவான யானைகளைப் பார்த்து விட்டு, மூவேந்தர்களின் யானைப்படையில் இருக்கும் ஆயிரக்கணக்கான யானைகளோடு ஒப்பிட்டு இவ்வளவு சொச்சமாக இருக்கிறேதே என்றார். தேக்கன், இவையும் இல்லாமலிருந்தால் மூவேந்தர் தரப்பு யானைப்படையை கொண்டுவராது. அதைத் தவிர்க்கவே, இவற்றை கொண்டு வந்துள்ளோம் என்றார். மேலும், நமது யானைப் படை அங்குள்ளது என்று மூவேந்தர் பக்கம் காட்ட, ஒன்றும் புரியாமல் விழித்தார். வாரிக்கையனோ, இன்று நீங்கள் தந்தமுத்தத்துக்காரர்களின் முழு ஆற்றலையும் பார்ப்பீர்கள் என்று மறைபொருளோடு சொல்ல ஒன்றும் விளங்காமலே பரண் நோக்கி சென்றார்.
பாரி, தேக்கன், முடியன், வாரிக்கையன் ஆகியோர் அனைவரும் ஒரே நாளில் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரித்து, அதற்கான பணிகளை எப்பொழுதோ தொடங்கி விட்டனர். பின்பு வந்த தகவல்களைக் கொண்டு சிறு சிறு மாற்றங்களை மட்டுமே செய்தனர்.
போர் தொடங்கி இரு பக்கமும் முழு வேகத்தோடு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கருங்கைவாணன் போர்க்களம் முழுவதும் சுற்றி வந்து தக்க கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். மூவேந்தர் படை ஆரம்பம் முதலே ஏறித்தாக்கும் நிலையில் போரிட்டுக் கொண்டிருந்தது. பறம்பு வாங்கித் தாக்கும் நிலையில் இருந்தும் மூவேந்தர் படையால் முன்னகர்ந்து வரமுடியவில்லை. போர் தொடங்கி சரியாக ஒன்றரை நாழிகையில் இருக்கஞ்செடியாலான மறைக்குறிப்பு காட்டப்பட்டது. பறம்பு வீரர்கள் முறியன் ஆசான் கொடுத்த விஷ முறிவு கிழங்கை வாயிலிட்டுக்கொண்டனர். அது கடலைச் செடியிலிருக்கும் எண்ணற்ற கடலைகளை போன்று இருந்தது.
அடுத்த ஒன்றரை நாழிகையில் முன் திட்டப்படி நூறு சூலூர் வீரர்கள் குதிரையில் முன்களம் நோக்கி விரைந்தனர். ஒவ்வொருவன் பின்னும் குதிரையில் இன்னொருவன் இருந்தான். இதைக் கவனித்த வேந்தர் படை தளபதிகள் இதன் அர்த்தம் புரியாமல், ஏதோ நடக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டே போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முன்னேறி சென்ற நூறு வீரர்களின் பின் அமர்ந்திருந்தவர் அனைவரும் கூவல்குடிகாரர்கள்.
சரியான தொலைவு சென்றதும் அவர்கள் யானையைப் போல பிளிற, மூவேந்தர் படையின் யானைகள் அனைத்தும் பிளிறியபடி தும்பிக்கையை உயர்த்தின. இதற்காகவே காத்திருந்த குதிரையின் முன்னாலிருந்த வீரர்கள், தங்களின் அம்புறாத்தோணியில் இருந்த ஒரு புதுவிதமான அம்பை எடுத்து வில்லில் பூட்டி பிளிறிய யானையின் வாய்க்குள் செலுத்தினர். அவையெல்லாம் கரும்பாலான அம்புகள். ஆனால் அதன் நடுவில் ஒரு மூலிகை சேர்மானம் பொட்டலமாக கட்டப்பட்டு இருந்தது.
தந்தமுத்தத்துக்காரர்கள் தாம் யானைகளுக்கான ஆதி மொழியை உருவாக்கியவர்கள். அவர்களால் யானைகளை புரிந்த அளவு மற்றவர்கள் யாருமில்லை. அவர்களால், யானைகளுக்கு மதத்தை தூண்டவும், சரிசெய்யவும் முடியும். சாதாரண யானையோடு ஒப்பிட்டால் மதம் கொண்ட யானையின் ஆற்றல் ஒப்பிட முடியாதுதான். ஆனாலும் மதம் கொண்ட பின் அது வெளிப்படுத்தும் ஆற்றல், அழிவின் தன்மை கொண்டு, சரள மதம், குட்ட மதம், உள் மதம் மற்றும் எரிமதம் என்று நான்கு வகைகளாக பிரித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி சரளமதத்தை உருவாக்கும் மூலிகை சேர்மானமே அந்த கரும்பு அம்புகளில் இருந்தது.
பறம்பின் முன்களத்திலிருந்து மூவேந்தர் யானைப்படை நிற்கும் தொலைவு வரை செல்ல பகழி அம்புகளே சிறந்தது. ஆனால் இப்போதைய தேவை அவற்றை கொல்வது அல்ல. எனவே ஈங்கையனிடம் பேசி எந்த வகை கரும்பு பகழி அம்புக்கு நிகரான வலுவோடு இருக்கும் என அறிந்து, அந்தவகை கரும்பிலே அம்பு செய்து அதில் சரளமதத்தை தூண்டும் மூலிகை சேர்மானத்தை கட்டி வைத்து எய்தனர்.
மூவேந்தர் யானைப்படையின் முன்வரிசையில் நின்ற நூறு யானைகளும் கரும்பென்று எண்ணி அந்த அம்புகளை சுவைக்கத் தொடங்கிய அரை நாழிகையில், அவற்றின் உடலில் மூலிகை சேர்மானம் வேலை செய்யத் தொடங்கியது. ஒவ்வொன்றாய் பெருங்குரலெடுத்து பிளிறத் தொடங்கி அனைத்து முன்வரிசை யானைகளும் மதம் கொண்டு நாலா பக்கமும் அழிவை ஆரம்பித்தன. ஓரிரு யானைக்கு அடக்குவது கடினமான வேலை, அதிலும் போர்க்களத்தில் எல்லா பக்கமும் வீரர்களை மிதித்து சூறையாடிக் கொண்டு முன்னால் நகர்ந்து வந்து கொண்டிருந்தன. மூவேந்தரின் மற்ற படைப்பிரிவுகள் பறம்பு வீரர்களுக்கும், மதம் கொண்ட யானைகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டன. இரு புறமும் அழிவு நடந்து கொண்டிருந்தது. கருங்கைவாணனுக்கு உடனடியாக செய்தி சொல்லப்பட்டது. மற்ற போர் யானைகளின் மூலம் மதம் கொண்ட யானைகளை கொல்லுங்கள் என்று ஆணையிட்டான் சத்தமாக. சத்தமில்லாமல் மற்றொரு ஆணையையும் பிறப்பித்தான். அது, படைக்கல கொட்டிலிலிருந்து பல்வேறு வகையான விஷத்தை போர்க்களத்திற்கு எடுத்து வரும் ஆணை.
குலசேகரப்பாண்டியன் ஏற்கனவே தன் தளபதியிடம் ஏதாவது ஒரு கொந்தளிப்பான நேரத்தில் திசைவேழரைக் கொன்றுவிடுமாறு காதோடு காதாக ஆணையிட்டிருந்தான். அப்பொழுதுதான் நம் படைகள் விஷத்தை பறம்பு மீது பயன்படுத்த முடியும். இல்லையேல் அறம், மறம் என்ற அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்றிருந்தான். இத்திட்டம் அந்த இருவரைத் தவிர கருங்கைவாணனுக்கு மட்டுமே தெரியும். அந்த தளபதி தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருக்கையில், மதம் பிடிக்காத யானைகளைக் கொண்டு மதம் பிடித்த யானைகளை கொல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனாலும் அவற்றின் அருகில் செல்ல முடியாததாகவே இருந்தது. மூவேந்தரின் படைகளை துவம்சம் செய்து கொண்டு அனைத்து யானைகளும் பறம்பின் முன்களம் நோக்கி வந்தன. அவை ஏற்படுத்திய சேதம், மலை மேலிருந்த பாறை உருண்டு சமதளத்திற்கு வரும்போது வழியில் உள்ள செடி, கொடிகளை நசுக்கிக் கொண்டு வருமே அதுபோல மதம் பிடித்த யானைகள் வந்த பாதை இருந்தது. பறம்பு வீரர்களை அவை நெருங்கி வரும்போது கரந்தை செடியை வைத்து அவற்றின் மதத்தை அடக்கி அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தனர் தந்தமுத்தத்துக்காரர்கள்...
No comments:
Post a Comment