Tuesday, August 6, 2024

தட்டியங்காட்டில் யானைப்போர் 2

யானையின் ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்துக்காரர்கள், அவற்றின் நிலை அறிந்து அது மதம் கொல்லப் போவதை முன்னரே அறிந்தனர். பல சந்ததிகளின் அறிவு சேர்மானம் மூலம் நால்வகை மதத்தையும், அதனை ஏற்படுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும் மூலிகைகளின் மூலம் வழி கண்டனர். ஒவ்வொரு வகை மதத்தின் ஆற்றலைக்கொண்டு அவற்றை சரள மதம், குட்ட மதம், உள் மதம் மற்றும் எரி மதம் என வகைப்படுத்தினர். ஒரு சரள மத யானையின் பிளிறல் பத்து மதம் கொள்ளா யானையின் பிளிறலுக்கு இணையாகாது. ஒரு குட்ட மத யானையின் பிளிறல் பத்து சரள மத யானையின் பிளிறலுக்கு இணையாகாது. ஒரு உள் மத யானையின் பிளிறலும் ஆற்றலும் பத்து குட்ட மத யானையின் பிளிறலுக்கு இணை சொல்ல முடியாது. உள் மத யானையின் பிளிறலைக் கேட்டால் மனிதனின் உள் இயக்கம் பாதிக்கப்பட்டு கால் பின்னி தரையில் வீழ்வான். எரி மத யானையின் பிளிறலுக்கு மதம் கொள்ளா யானையின் உள்ளியக்கம் தடைபட்டு கீழே விழும்.   

சரள மதம் கொண்ட யானைகளை கொல்ல கருங்கைவாணன் ஆணையிட்ட போதும், அவற்றை நெருங்க முடியாதபடி இருந்தன. ஆயினும் ஒன்றிரண்டு மற்ற யானைகளால் குத்தப்பட்டு கொல்லப்பட்டன. கரந்தை செடி கொண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்ட யானைகளை, மூவேந்தர் படையை நோக்கி திருப்பி நிறுத்தி, அதன் குதத்தில் நீள்வட்ட மூங்கிலை செலுத்தி சில மூலிகை சேர்மானத்தை செலுத்தினர். இருப்பினும் அவற்றின் மூலிகை சேர்மானம் ஒன்று போல இருக்கக் கூடாது என்பது பறம்பின் யானைப்படை தளபதியின் கட்டளை. அவற்றில் சரிபாதி யானைகளுக்கு குட்ட மதமும், மற்றவற்றிற்கு உள் மதமும் ஏற்பட தேவையான சேர்மானம் கொடுக்கப்பட்டது. வாய்மூலம் கொடுக்கப்படும் மூலிகையை விட குதத்தின் வழியே கொடுக்கப்படும் மூலிகை விரைவில் வேலை செய்யத் தொடங்கியது. அரை நாழிகையில் எல்லா யானைகளும் பெருங்குரலெடுத்து பிளிறியபடி மூவேந்தர் படையை நோக்கி ஓடின. போகும்போது இருந்ததற்கும் அவை திரும்பி வரும்போது இருப்பதற்கும் ஏதோ வேறுபாடு என்று எண்ணிய மூவேந்தர் படையை துவம்சம் செய்ய ஆரம்பித்தன.

பறம்பு வீரர்கள் கரந்தைச் செடியைக் கொண்டு மதத்தை அடக்கியதை பார்த்த மூவேந்தர் தரப்பு, அவ்வாறே இப்பொழுதும் செய்யலாம் என முயன்ற ஒவ்வொருவனும் தும்பிக்கையால் வளைத்து தூக்கி எறிந்ததில் பத்துப் பனை தூரம் போய் விழுந்தான். அவன் சுதாரித்து எழும்முன் ஓடி வந்த யானை அவனை மிதித்து கொன்று விட்டு அவனை கடந்து சென்று கொண்டிருந்தது. முயன்றவர்களுக்கு தெரியவில்லை, கரந்தை செடி கொண்டு சரள மதத்தைத் தான் அடக்க முடியும் என்று.

சரள மதம் கண்ட யானையின் மேல் மனம் மட்டும் சற்றே பிசகி இருக்கும். ஆகையால் கரந்தை செடி கொண்டு அதனை சரி செய்ய முடியும். ஆனால் குட்ட மதம் கண்ட யானையின் மேல் மனம் முற்றிலும் பிசகி விடும். உள் மதம் கண்ட யானைகளுக்கு நடு மனமும் சேர்ந்து பிசகி விடும். எரி மதம் கண்ட யானைகளுக்கோ ஆழ் மனமும் சேர்ந்தே பிசகிவிடும். சரள மதமும் உள் மதமும் கண்ட யானைகள் அரை நாழிகையில் மூவேந்தரின் முதல் நிலைப் படையை உருத் தெரியாமல் அழித்துவிட்டு இரண்டாம் நிலை நோக்கி வீறு கொண்டு வந்து கொண்டிருந்தன.

யானைகளுக்கு மூலிகை சேர்மானம் குதத்தில் கொடுத்து கொண்டு இருக்கும்போதே சில கரு நிற சுரைக்  குடுவைகள் இரலி மேட்டிலிருந்து வந்து சேர்ந்தன. இராவெரி மரத்தின் வேர்கள் தன்னியல்பில் கருமை நிறம் கொண்டிருக்கும். அவற்றை வெட்டி எடுத்து வந்து எரித்து கரியாக்கிவிடுவர். பின்பு அதனை பொடியாக்கி அதனுடன் கொடி நெல்லி சாறு கலந்து பிசின் போல செய்து சரியான அளவில் உள்ள சுரைக்குடுவையின் வெளியே பூசிவிடுவர். அது மெல்லிய தோல் போன்று இருக்கும். அதுனுள்ளே எந்த மணம் வீசும் பொருளை வைத்தாலும், அது வெளியே மணத்தை கசிய விடாது. ஒளியையே தனக்குள் கட்டி வைக்கும் மரத்தின் தன்மைக்கு முன்னால் மணத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அக்குடுவைக்குள்ளே காட்டெருமையின் சாணம் வைக்கப்பட்டு முற்றிலும் மூடப்படும். அக்குடுவையை வேகமாக தரையில் அடித்தால் உடைந்து உள்ளிருக்கும்  சாணம் வெளி வந்துவிடும்.

மூவேந்தரின் இரண்டாம் நிலை நோக்கி வந்த யானைகளில் ஒன்றிரண்டு வந்த வழியே திரும்ப முயன்ற பொது இரவாதனும், உதிரனும் அந்த கருஞ்சுரை குடுவைகளை பத்தடி தொலைவில் இரு அம்பு கொண்டு விழசெய்து பின்பு அதை உடைத்தனர். காட்டெருமையின் சாணத்தின் நெடி மூக்கில் ஏறியதும் அவற்றின் ஆதி புலத்தில் இருந்த அச்சம் மேலெழுந்து வந்தது. அதனால் அவ்வாடை வந்த திசையின் எதிர் திசையில் அதாவது மூவேந்தர் படையை நோக்கி தறி கெட்டு ஓட செய்தது.

இரண்டாம் நிலையில் இருந்து கொண்டு கட்டளைகள் பிறப்பித்து கொண்டிருந்த கருங்கைவாணனின் தேரை ஒரு யானை முட்டி தூக்கி வீசியது. வீசும்முன் சுதாரித்து தரையில் குதித்து தன்னை காத்துக் கொண்டான் மகாசாமாந்தகனான அவன். அப்பொழுதே அவனுக்கு பாதி விளங்கி விட்டது. இந்நிலையில் குலசேகரனின் தளபதி முன் திட்டப்படி, இரு அம்பெய்தி திசைவேழரைக் கொன்று விட்டான். இதைக் கண்ட பறம்பு வீரர்கள் கூவல் குடி மூலம் பாரிக்கு தகவல் அனுப்பினர். அறத்திற்காக தன்னுயிரை ஈந்த அவரின் உடலை பறம்புக்கு கொண்டு வரச் சொல்லி தகவல் அனுப்பினான் பாரி. கூடவே கபிலரையும் கூட்டிவர சொல்லி விட்டான்.  பறம்பின் சிறந்த யானையின் மீது வைத்து திசைவேழரின் உடல் பச்சை மலை நோக்கி சென்றது. திசைவேழர் இறந்ததை கூவல் குடிகாரன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கபிலர். பாரியின் தகவலை சொன்னதும் ஒரு பறம்பு வீரனோடு பாரியின் இருப்பிடம் நோக்கி சென்றார் அவர்.

தன் தரப்பு கோள் சொல்லியையே கொல்லும் எண்ணமுள்ளவன் இன்னும் என்னவெல்லாம் செய்வான் என்று எண்ணிய பாரி, இந்த போர் ஏற்கனவே முடிந்து விட்டது. இனி நடப்பதெல்லாம் அழித்தொழிப்புதான் என்று எல்லா பறம்பு வீரனுக்கும் கூவல் குடிகாரன் மூலம் தகவல் சொல்லிவிட்டான். பறம்பு வீரர்கள் முறியன் ஆசான் கொடுத்த விஷமுறி மருந்தினால் விஷந்தோய்ந்த அம்பு, வேல், வாள் கொண்டு தாக்கினாலும் அவற்றால் பாதிக்கப்படாமல் வீறுகொண்டு மூர்க்கமாக போரிட்டுக் கொண்டிருந்தனர். சோழத் தளபதி ஒருவன் பறம்பு வீரர்களில் சிலர் மட்டும் அம்மருந்து கடலையை வாயில் போடவில்லை எனத் தெரிந்து, அதிலொருவனை தாக்கி அழிக்க விஷந்தோய்ந்த வாளோடு வந்தான். அவனுக்குத் தெரியாது விஷ மூலிகை நாவில் பட்டால் மூலிகைக்கே விஷமேற்றும் நாகர்குடிக்காரனை எதிர்க்கப் போகிறோம் என்று. அதிலும் அவன் தேர்ந்தெடுத்து தாக்க நினைத்தது உதிரனை. ஏற்கனவே தன் மனங்கவர் அங்கவையின் ஆசிரியரும், தன்னை மகனைப் போல நடத்தியவருமான கபிலரின் அழுகைக்குக் காரணமான ஒருவனையும் விடக்கூடாது என்று கண்ணில் பொறி பறக்க சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் வலிய வந்து சிக்கிய சோழத் தளபதியின் கை,கால்களை சோளத்தட்டையை உரிப்பது போல தன் ஈர்வாளால் வெட்டி உரித்துப் போட்டான் உதிரன்.

Saturday, August 3, 2024

தட்டியங்காட்டில் யானைப்போர் 1

தேக்கனும் வாரிக்கையனும் தட்டியங்காட்டைப் பற்றி அறிந்து வர கானவர் தலைவனைப் பார்க்க சென்றனர். கானவர் தலைவன் இகுளிக்கிழவன் தட்டியங்காட்டை சாமேடு என்றும் அங்கு செங்காவி நிற ஓணான் மட்டுமே இருக்கும் என்று சொன்னார். ஆதலால் அங்கே யானைப்போரை நடத்தக் கூடாது என்றார்.  இல்லையேல் அவை அழிந்து விடும் என்றும் அப்படி நடந்தால் காக்காவிரிச்சியின் முட்டைகள் அழிக்கப்படாமல் இந்நிலமெங்கும் காக்காவிரிச்சி இனம் பெருகும்  என்று அஞ்சியவாறே சொன்னார்.

அதற்கு தேக்கன், செங்காவி நிற ஓணான் அழியாமல் யானைப் போரை நடத்தினால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே எனக் கேட்க, இகுளிக்கிழவன் "அது எப்படி சாத்தியம்?" என்று வினவினார். தேக்கன் தான் பொதினிக்கு சென்றிருந்த போது பூனையை வைத்துக் கொண்டே எலிகளுக்கு உணவளித்தனர். ஆனால் பூனை அசையவே இல்லை. இது எப்படி என்று பொதினி மக்களை கேட்டபோது, "பூனை வணங்கி" மூலிகையை பற்றி விவரித்தனர். தான் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருக்க, இதை விட எந்த ஓணான் இனத்தையும் சில நாழிகை மயக்கமுறச் செய்யும் "கரத்துஞ்சி" மூலிகை பற்றி சொன்னபோது நான் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைந்தேன் என்றார். அம்மூலிகையை வைத்து செங்காவி நிற ஓணான்களை மயக்கமுற்ற செய்து பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுவோம். பின்பு யானைப்போரை நடத்துவோம் என்றார்.

அதற்கு இகுளிக்கிழவன், அது தரையினடியில் இரண்டு அடி ஆழத்தில் வளை அமைத்து வாழும் தன்மையுடையது. அதை எப்படி வெளிக்கொணர முடியும் என சந்தேகப்பட்டார். வாரிக்கையன், எங்கள் கூவல்குடிக்காரன் பத்தடி ஆழத்திலிருக்கும் கருங்கற்தலையனுக்கே செய்தி சொல்லுவான், இரண்டடி எல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லை என்றான். இகுளிக்கிழவனை வணங்கி இருவரும் விடைபெற்றனர்.

தேவையான தகவல்களோடு வந்து தேக்கனும் வாரிக்கையனும் பாரியிடம் அனைத்தையும் விவரித்தனர். முறியன் ஆசான் உதவியோடு அவரின் சீடர்கள் கரத்துஞ்சி மூலிகையை எடுத்து வந்தனர். தட்டியங்காட்டில் உள்ள செங்காவி நிற ஓணானை கூவல்குடி உதவியோடு வெளிவரச்செய்து, கரத்துஞ்சி மூலிகை மூலம் மயக்கமுற்ற செய்து மற்றொரு பாதுகாப்பான இடத்தில் அனைத்து ஓணான்களையும் விட்டனர்.

தட்டியங்காட்டில் முதல் நாள் போர் ஆரம்பானது. பறம்பு வீரர்கள் அனைவரும் முழு வேகத்தோடு போர் புரிய ஆயத்தமாக இருந்தனர். கபிலர் நிலைமான் கோல்சொல்லியின் கண்காணிப்பு பரண் நோக்கி செல்லும்போது, பறம்பு தரப்பில் பத்துக்கும் குறைவான யானைகளைப் பார்த்து விட்டு, மூவேந்தர்களின் யானைப்படையில் இருக்கும் ஆயிரக்கணக்கான யானைகளோடு ஒப்பிட்டு இவ்வளவு சொச்சமாக இருக்கிறேதே என்றார். தேக்கன், இவையும் இல்லாமலிருந்தால் மூவேந்தர் தரப்பு யானைப்படையை கொண்டுவராது. அதைத் தவிர்க்கவே, இவற்றை கொண்டு வந்துள்ளோம் என்றார். மேலும், நமது யானைப் படை அங்குள்ளது என்று மூவேந்தர் பக்கம் காட்ட, ஒன்றும் புரியாமல் விழித்தார். வாரிக்கையனோ, இன்று நீங்கள் தந்தமுத்தத்துக்காரர்களின் முழு ஆற்றலையும் பார்ப்பீர்கள் என்று மறைபொருளோடு சொல்ல ஒன்றும் விளங்காமலே பரண் நோக்கி சென்றார்.             

பாரி, தேக்கன், முடியன், வாரிக்கையன் ஆகியோர் அனைவரும் ஒரே நாளில் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரித்து, அதற்கான பணிகளை எப்பொழுதோ தொடங்கி விட்டனர். பின்பு வந்த தகவல்களைக் கொண்டு சிறு சிறு மாற்றங்களை மட்டுமே செய்தனர்.

போர் தொடங்கி இரு பக்கமும் முழு வேகத்தோடு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கருங்கைவாணன் போர்க்களம் முழுவதும் சுற்றி வந்து தக்க கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். மூவேந்தர் படை ஆரம்பம் முதலே ஏறித்தாக்கும் நிலையில் போரிட்டுக் கொண்டிருந்தது. பறம்பு வாங்கித் தாக்கும் நிலையில் இருந்தும் மூவேந்தர் படையால் முன்னகர்ந்து வரமுடியவில்லை. போர் தொடங்கி சரியாக ஒன்றரை நாழிகையில் இருக்கஞ்செடியாலான மறைக்குறிப்பு காட்டப்பட்டது. பறம்பு வீரர்கள் முறியன் ஆசான் கொடுத்த விஷ முறிவு கிழங்கை வாயிலிட்டுக்கொண்டனர். அது கடலைச் செடியிலிருக்கும் எண்ணற்ற கடலைகளை போன்று இருந்தது.

அடுத்த ஒன்றரை நாழிகையில்  முன் திட்டப்படி நூறு சூலூர் வீரர்கள் குதிரையில் முன்களம் நோக்கி விரைந்தனர். ஒவ்வொருவன் பின்னும் குதிரையில் இன்னொருவன் இருந்தான். இதைக் கவனித்த வேந்தர் படை தளபதிகள் இதன் அர்த்தம் புரியாமல், ஏதோ நடக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டே போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முன்னேறி சென்ற நூறு வீரர்களின் பின் அமர்ந்திருந்தவர் அனைவரும் கூவல்குடிகாரர்கள். 

சரியான தொலைவு சென்றதும் அவர்கள் யானையைப் போல பிளிற, மூவேந்தர் படையின் யானைகள் அனைத்தும் பிளிறியபடி தும்பிக்கையை உயர்த்தின. இதற்காகவே காத்திருந்த குதிரையின் முன்னாலிருந்த வீரர்கள், தங்களின் அம்புறாத்தோணியில் இருந்த ஒரு புதுவிதமான அம்பை எடுத்து வில்லில் பூட்டி பிளிறிய யானையின் வாய்க்குள் செலுத்தினர். அவையெல்லாம் கரும்பாலான அம்புகள். ஆனால் அதன் நடுவில் ஒரு மூலிகை சேர்மானம் பொட்டலமாக கட்டப்பட்டு இருந்தது.

தந்தமுத்தத்துக்காரர்கள் தாம் யானைகளுக்கான ஆதி மொழியை உருவாக்கியவர்கள். அவர்களால் யானைகளை புரிந்த அளவு மற்றவர்கள் யாருமில்லை. அவர்களால், யானைகளுக்கு மதத்தை தூண்டவும், சரிசெய்யவும் முடியும். சாதாரண யானையோடு ஒப்பிட்டால் மதம் கொண்ட யானையின் ஆற்றல் ஒப்பிட முடியாதுதான். ஆனாலும் மதம் கொண்ட பின் அது வெளிப்படுத்தும் ஆற்றல், அழிவின் தன்மை கொண்டு, சரள மதம், குட்ட மதம், உள் மதம் மற்றும் எரிமதம் என்று நான்கு வகைகளாக பிரித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி  சரளமதத்தை உருவாக்கும் மூலிகை சேர்மானமே அந்த கரும்பு அம்புகளில் இருந்தது. 

பறம்பின் முன்களத்திலிருந்து மூவேந்தர் யானைப்படை நிற்கும் தொலைவு வரை செல்ல பகழி அம்புகளே சிறந்தது. ஆனால் இப்போதைய தேவை அவற்றை கொல்வது அல்ல. எனவே ஈங்கையனிடம் பேசி எந்த வகை கரும்பு பகழி அம்புக்கு நிகரான வலுவோடு இருக்கும் என அறிந்து, அந்தவகை கரும்பிலே அம்பு செய்து அதில்  சரளமதத்தை தூண்டும் மூலிகை சேர்மானத்தை கட்டி வைத்து எய்தனர்.

மூவேந்தர் யானைப்படையின் முன்வரிசையில் நின்ற நூறு யானைகளும் கரும்பென்று எண்ணி அந்த அம்புகளை சுவைக்கத் தொடங்கிய அரை நாழிகையில், அவற்றின் உடலில் மூலிகை சேர்மானம் வேலை செய்யத் தொடங்கியது. ஒவ்வொன்றாய் பெருங்குரலெடுத்து பிளிறத் தொடங்கி அனைத்து முன்வரிசை யானைகளும் மதம் கொண்டு நாலா பக்கமும் அழிவை ஆரம்பித்தன. ஓரிரு யானைக்கு அடக்குவது கடினமான வேலை, அதிலும் போர்க்களத்தில் எல்லா பக்கமும் வீரர்களை மிதித்து சூறையாடிக் கொண்டு முன்னால் நகர்ந்து வந்து கொண்டிருந்தன. மூவேந்தரின் மற்ற படைப்பிரிவுகள் பறம்பு வீரர்களுக்கும், மதம் கொண்ட யானைகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டன. இரு புறமும் அழிவு நடந்து கொண்டிருந்தது. கருங்கைவாணனுக்கு உடனடியாக செய்தி சொல்லப்பட்டது. மற்ற போர் யானைகளின் மூலம் மதம் கொண்ட யானைகளை கொல்லுங்கள் என்று ஆணையிட்டான் சத்தமாக. சத்தமில்லாமல் மற்றொரு ஆணையையும் பிறப்பித்தான். அது, படைக்கல கொட்டிலிலிருந்து பல்வேறு வகையான விஷத்தை போர்க்களத்திற்கு எடுத்து வரும் ஆணை.

குலசேகரப்பாண்டியன் ஏற்கனவே தன் தளபதியிடம் ஏதாவது ஒரு கொந்தளிப்பான நேரத்தில் திசைவேழரைக் கொன்றுவிடுமாறு காதோடு காதாக ஆணையிட்டிருந்தான். அப்பொழுதுதான் நம் படைகள் விஷத்தை பறம்பு மீது பயன்படுத்த முடியும். இல்லையேல் அறம், மறம் என்ற அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்றிருந்தான். இத்திட்டம் அந்த இருவரைத் தவிர கருங்கைவாணனுக்கு மட்டுமே தெரியும். அந்த தளபதி தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருக்கையில், மதம் பிடிக்காத யானைகளைக் கொண்டு மதம் பிடித்த யானைகளை கொல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனாலும் அவற்றின் அருகில் செல்ல முடியாததாகவே இருந்தது. மூவேந்தரின் படைகளை துவம்சம் செய்து கொண்டு  அனைத்து யானைகளும் பறம்பின் முன்களம் நோக்கி வந்தன. அவை ஏற்படுத்திய சேதம், மலை மேலிருந்த பாறை உருண்டு சமதளத்திற்கு வரும்போது வழியில் உள்ள செடி, கொடிகளை நசுக்கிக் கொண்டு வருமே அதுபோல மதம் பிடித்த யானைகள் வந்த பாதை இருந்தது. பறம்பு வீரர்களை அவை நெருங்கி வரும்போது கரந்தை செடியை வைத்து அவற்றின் மதத்தை அடக்கி அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தனர் தந்தமுத்தத்துக்காரர்கள்...                                 

Sunday, June 30, 2024

"கண்"ஜெக்ட்டிவிட்டீஸ்

அன்று காலை நான் எழுந்தபோது, எனது பார்வை UHF சேனலில் ஒரு பேண்ட் கெட்டுப்போனது போல எல்லாம் மச மச என்று தெரிந்தது. கண்ணாடியில் பார்த்தபோது ஒரு கண் மட்டும் அவசரமாக குங்குமத்தை நீரில் கரைத்து ஆரத்தி செய்தது போல சிவப்பாக இருந்தது. கூடவே பொங்கலுக்கு வாசலில் வைக்கும் பூளைப் போல கண்ணின் ஓரத்தில் வெள்ளைப் பிசின். "சரி தான்.. கஞ்ஜெக்ட்டிவிட்டீஸ்"  என்று எண்ணிக் கொண்டே மேசை மேலிருந்த கையடக்க டிஜிட்டல் அலாவுதீன் விளக்கை எடுத்து கீபேடில் எண்களை ஒற்றி வசந்தை அழைத்தேன்.

ஒரே ரிங்கில் எடுத்து "குட்மோர்னிங் பாஸ், என்ன அதிகாலையிலேயே? ஏதாவது கிளைன்ட் பிரிட்ஜ் ஆட வந்து ஒரு கை குறையவும் எனக்கு ரிங் பண்ணினீங்களா ?" என்றான். விஷயத்தை சொல்லி, "கிளம்பி வா.. இங்கே கல்பனா என்றொரு ஆப்தமாலஜிஸ்ட் இருக்கிறார். பார்த்துவிட்டு வரலாம்" என்றேன்.

"ஒரு டவுட் பாஸ்" என்றான் வசந்த்.

"என்ன?  கஞ்ஜெக்ட்டிவிட்டீஸிலா?" என்றான் கணேஷ்.

"இல்ல.. கல்பனா ஸ்பின்ஸ்டரா?" என்றான் வசந்த்.

கணேஷ், "நீ காலையிலேயே உத படப் போற. வா சீக்கிரம்" என்று இணைப்பைத் துண்டித்தான்.

வசந்த் வருவதற்குள் கொஞ்சம் கணேஷ் பற்றி, இன்னைய தேதியில் சிட்டியில் லீடிங் லாயர், ரொம்ப ஜீனியஸ், எடுத்த கேஸை ஜெயிக்காமல் விட்டதில்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் அறிவிற்கேற்ற பெண் இன்னும் கிடைக்கவில்லை.

மனைவி என்பவள் "இவனைக் கவனித்து, சிசுருஷை செய்து, கலவி கொண்டு, சண்டை போட்டு முடிகிற விஷயமில்லை, அது சீக்கிரம் போர் அடிக்கும். தனக்கு நிகராக தன் எண்ணங்களையும் பகிர்ந்து விவாதிக்க ஒரு துணை வேண்டும்" என்பான்.

முப்பதாவது நிமிட முடிவில் வசந்த் வந்தான்.

"ரெடியா பாஸ்? போலாமா?" என்றான்.

சரக்கென்று கியரை மாற்றி விசுக்கென்று காரை கிளப்பினான். மருத்துவமனையை அடைந்த போது அங்கிருந்த செக்யூரிட்டி முனீஸ்வரன் போல மீசை வைத்து நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமத்தோடு அமர்ந்திருந்தார். இவர்களின் காரை கண்டவுடன் எழுந்து வந்து வணக்கம் வைத்து எங்கே பார்க் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உயரத்தை அருகில் பார்த்துவிட்டு, முனீஸ்வரனிடம் மானசீகமாக சாரி சொல்லிவிட்டு படிகளில் ஏறினான் கணேஷ்.

கம்ப்யூட்டரில் ஏதோ உள்ளீடு செய்து கொண்டிருந்த ரிசப்ஷனிஸ்ட் கணேஷைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்துவிட்டு, அவனுடைய விவரங்களைக் கேட்டு ஒரு பார்மில் குறித்துக் கொண்டு காத்திருக்க சொன்னாள்.

கணேஷ் காத்திருக்கும்போது வசந்த் வந்து இணைந்து கொண்டான். கணேஷ் பெயரை அழைத்துக் கொண்டு இன்னொரு பெண் வந்தாள்.

அவள் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, "இந்த பொண்ணு ரெட் கார்பெட் இல்லாமலே கேட் வாக் பண்ணுது பாஸ்" என்றான் வசந்த்.

"நேத்து ராத்திரி கூட இதே மாதிரி ஒரு பொண்ணு நடந்து வந்ததை F TV யில பாத்தேன். என்ன.. இந்த பொண்ணு நெறய துணி போட்ருக்கு" என்றான்.

"டேய்.. உன்ன கண்டிக்க ஆள் இல்லாம திரியிற" என்றான் கணேஷ்.

கணேஷை அழைத்துக் கொண்டு போய் ஸ்நெல் சார்ட்டைக் காட்டி கண்ணில் மையோபியாவா இல்லை ஹைபெரோப்பியவா என்று செக் செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

கணேஷுக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், அவர் அப்பாவை அழைத்துக் கொண்டு கண் டாக்டரிடம் போன ஜோக் ஞாபகம் வரவே வேறு பக்கம் பார்த்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

கண்ணில் ட்ராப்ஸ் விட்டு டைல்யூட் செய்து செக் செய்ய வேண்டும் என்று சொல்லவே, வெளியே வந்து காத்திருந்தான்.  

கணேஷின் கண்களில் டைலியூடிங் சொலுயூஷன் விட்டு காத்திருந்த போது

"பாஸ், கண்ணை டைலியூட்  செய்து பார்ப்பது போல மனசையும் பார்க்க முடியுமா?" என்றான் வசந்த் 

"முடியுமே! ஹிப்னாடிசம் மூலமாக" என்றான் கணேஷ்

"அப்டினா.. எலக்க்ஷனுக்கு முன்னாடி எல்லா கண்டஸ்டண்ட்டையும் ஹிப்னாடைஸ் பண்ணி அவங்க எதுக்கு எலெக்ஷன்-ல நிக்கிறாங்கன்னு செக் பண்ணிடலாமே ?" என்றான் வசந்த் 

"அது தான் இல்ல... நம்ம அரசியல்வாதிங்க, ஹிப்னாடைஸ் பண்றவருக்கு குடுக்க வேண்டியத குடுத்து ஹிப்னாடைஸ் பண்ணாமலே, ஹிப்னாடைஸ் ஆனமாதிரி நடிச்சு மக்களுக்கு நல்லது செய்யத்தான் எலெக்க்ஷன்-ல நிக்கிறேன்னு சொல்லுவாங்க. நம்ம மக்களும் அத நம்பி புளகாங்கிதம் அடஞ்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சுட்டு பத்து நாள்ல பாய பிறாண்ட ஆரம்பிச்சுடுவாங்க" என்றான் கணேஷ்.

"அப்ப ஊழலை ஒழிக்கவே முடியாதா பாஸ் ?" என்றான் வசந்த் 

"ஜீன் அளவில ஏதாவது மாத்தினா தான் உண்டு " என்றான் கணேஷ்.

 இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் IOL லிக்விட் பிரஷர் செக் செய்ய வேண்டுமெனக் கூறி கணேஷை கூட்டிச்சென்று, டோனோமீட்டர் முன்னே அமர வைத்து தாடையை ஒட்ட வைத்து பின், "பாப்" என்ற ஒலியோடு கண்ணில் ஒரு ஏர் பப்பில் வந்து அடித்து அளவீடுகளை எடுத்துவிட்டு காத்திருக்க சொன்னார்கள்.

அனைத்து டெஸ்டும் முடிந்த பின்னே டாக்டர் கல்பனாவை பார்க்க அவரின் அறைக்கு சென்றனர். அவர் ஒற்றை நாடியோடு பழைய நடிகை மீனாகுமாரியை நினைவு படுத்தினார்.

"உட்காருங்க கணேஷ்" என்று பேஷன்ட்-க்கான இருக்கையை காட்டினார் டாக்டர் கல்பனா 

"டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் நார்மலா இருக்கு. உங்கள் கண்களை நானும் ஒருமுறை செக் செய்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, "என்னோட லெப்ட் இயர பாருங்க" என்று சொல்லி ஒரு பிரிஸம் வழியாக கணேஷின் வலது கண்ணையும் "ரைட் இயர்" என்று இடது கண்ணையும் செக் செய்துவிட்டு, "பாக்டீரியல் இன்பெக்ஷன் அது தான் கஞ்ஜெக்ட்டிவிட்டீஸ். ஆன்டி பாக்டீரியல் கிரீமும் ஒரு ட்ராப்ஸ்சும் பிரஸ்கிரைப் செய்றேன். இட் வில் பி ஆல்ரைட் இன் கபுல் ஆப் டேஸ் " என்றார்.

"ஓகே மேடம் தேங்க் யூ " என்றான் கணேஷ்.

"எனக்கு ஒரு டவுட்" என்றான் வசந்த் 

அவனை வினாக்குறியோடு கணேஷ் பார்க்க 

"இதுவும் மெடிக்கல் கவுன்சிலில் ரூல்சா மேடம் ?" என்றான் வசந்த்.     

"எது ?" என்றார் டாக்டர்.

"வைரக்கம்மல் போட்டுகிறதுதான். எங்க பாஸ்-ஐ உங்களின் லெப்ட், ரைட் இயர் பாக்க சொல்லும்போது நானும் பார்த்தேன். பேஷன்ட் பாக்க ஈஸியா இருக்கும்னு போட்ருக்கீங்களா?" என்றான் வசந்த்.

"டேய்... சும்மா இருக்க மாட்டியா?..." என்று அதட்டிவிட்டு , "தேங்க் யூ அகைன்" என்றான் கணேஷ்.

கபாலிக்கு தெரிந்தால் "வாத்யாரே! மெட்ராஸ் ஐ-னு ரீஜண்ட்டா சொல்லாம, கஞ்சக்ட்டி, பஞ்சக்ட்டி னு டபாய்க்காதே வாத்யாரே" என்பான் என்று நினைத்து சிரித்துக் கொண்டே ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தான் கணேஷ் வசந்தோடு..

Sunday, March 3, 2024

பசலை



























































ஆக்ஸிடோசின் காதல்