Tuesday, February 1, 2022

திருக்குறள் கவிதை 1

தேக்கனைய தேகன் - அவன் 
வேல் வீசும் பாங்கைக் கண்டு 
வெருண்டோடும் வேங்கை.

வேல் வீசி நீண்ட தடக்கை 
அம்பெய்து காய்த்த மணிக்கை 
சமரில் வெல்வது உள்ள கிடக்கை.

தன் குல மரம் காக்க 
தன் இன மறம் காட்ட 
களம் கண்டான் 
காளை.

எதிர்ப்போரை 
ரணம், 
நிணம், 
பிணம் 
ஆக்கியது 
அவன் கரம்.

எதிரில் ஒரு வேழம் 
காது ரெண்டும் இரு சொளகு அகலம் 
குறுக்கே வந்தோரை 
குறுக்கிலே மிதித்து 
அனுப்பியது பரலோகம்.

கண்டான் நம் காளை 
அக்கரியை 
அக்கறையாய்.

அதனை வீழ்த்த 
கோள் கொண்டு 
வேல் கொண்டான்.

கரியை வீழ்த்த 
மாரியாய் பொழிந்தான் வேலை 
மரிக்க போகும் வேளை 
தன் திறமெல்லாம் கூட்டி 
தாக்க வந்தது அவனை.

அது மடிய 
ஒரு வேல்வீச்சு மீதி...
என்ன ஒரு அநீதி!
காளையின் கையில் 
வேலே இல்லை 
துடித்து தேடினான் 
ஒரு வேலை
ஒருவேளை தன் பின்னே 
இருக்குமோ என

வலம் இடம்  
வளைத்து தேடியும் 
கை கூடவில்லை.
கைக்கு ஒரு வேல் 
அகப்படவில்லை.

பின் 
கண்டு கொண்டான் 
ஒன்றை...
ஆம்.. அது இருந்தது 
அவன் மார்பிலே பாய்ந்து.

பார்த்தவுடன் 
பூத்தான் புன்னகை
வீழ்ந்ததடா வேழம் என்று... 
 
*திருக்குறள்*
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்

No comments: