அவன்
கட்டிளங்காளை
அழகிலே அளவிலாதவன்
அளவிலே அலகானவன்..
அவன்
பெற்றோர் விருப்பப்படி
சுற்றத்து
மணமுன்றிலுக்கு
சென்றான்
முன்னரே...
பணித்த பணிகளை
நுணுக்கமாய் முடித்தான்.
மணமக்கள் பெற்றோருக்கு
அணுக்கமாய் இருந்தான்.
இவன் செய்த
வேலைகளை
பார்த்தவர்களை
திக்குமுக்காட வைத்தான்
துல்லியத்திலே..
தேனிலே ஊறிய
பலாப்பழத்தை
மொய்க்கும் தேனீக்களாய்
கன்னியர் விழிப்பார்வை
தைத்தது இவனை..
அக்கூட்டத்திலே ஒரு
அரிவை
அஞ்சனமிட்ட
அஞ்சுகம்
கங்குலை மிஞ்சும்
கார்குழல்
கால்
வரை நீளும்..
அவள்
அவனியில்
பவனி வரும்
ஆணிப்பொன்
அம்புலி..
அவள் விரும்பினாள்
அவனை தன்
ஆளனாக
தன் மணமாலை சூடும்
தோளனாக..
அவன்
வந்த திருமணம்
நன்று முடிந்ததில்
மட்டற்ற மகிழ்ச்சி
மற்றோருக்கும் மணமக்கள்
பெற்றோருக்கும்..
வேலை
எல்லாம் முடிந்த பின்னே
சுற்றத்தாரோடும், தான் ஒன்றாக
சுற்றிய நண்பர்களோடும்
அளவளாவும் வேளை..
தன்
மனம் கவர்
பைங்கிளி
விழிகளால்
இவனை
வெல்லவும் முடியாது
தள்ளவும் முடியாது
தத்தளித்து நின்றாள்
தூரத்திலே,
மோனத்திலே..
தன்
மேல் ஊரும்
சூழ்மேகத்தின் நிழலை
அறியாதா நிலம்??
தன் மீது ஊரும்
விழியின்
சொந்தக்காரியை
பந்தலிட்டு
மன்றல் முடிக்கப்போகும்
பந்தக்காரியை
அவன் காண...
நாணத்திலே
தன் ஆளனை,
நெஞ்சு
நிறை மாலனை விடுத்து
தரை பார்த்தாள்...
அவன் காணாத போது
தான் பார்த்து மெல்ல
புன்னகை பூத்தாள்...
*திருக்குறள்*
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்