அன்று காலை நான் எழுந்தபோது, எனது பார்வை UHF சேனலில் ஒரு பேண்ட் கெட்டுப்போனது போல எல்லாம் மச மச என்று தெரிந்தது. கண்ணாடியில் பார்த்தபோது ஒரு கண் மட்டும் அவசரமாக குங்குமத்தை நீரில் கரைத்து ஆரத்தி செய்தது போல சிவப்பாக இருந்தது. கூடவே பொங்கலுக்கு வாசலில் வைக்கும் பூளைப் போல கண்ணின் ஓரத்தில் வெள்ளைப் பிசின். "சரி தான்.. கஞ்ஜெக்ட்டிவிட்டீஸ்" என்று எண்ணிக் கொண்டே மேசை மேலிருந்த கையடக்க டிஜிட்டல் அலாவுதீன் விளக்கை எடுத்து கீபேடில் எண்களை ஒற்றி வசந்தை அழைத்தேன்.
ஒரே ரிங்கில் எடுத்து "குட்மோர்னிங் பாஸ், என்ன அதிகாலையிலேயே? ஏதாவது கிளைன்ட் பிரிட்ஜ் ஆட வந்து ஒரு கை குறையவும் எனக்கு ரிங் பண்ணினீங்களா ?" என்றான். விஷயத்தை சொல்லி, "கிளம்பி வா.. இங்கே கல்பனா என்றொரு ஆப்தமாலஜிஸ்ட் இருக்கிறார். பார்த்துவிட்டு வரலாம்" என்றேன்.
"ஒரு டவுட் பாஸ்" என்றான் வசந்த்.
"என்ன? கஞ்ஜெக்ட்டிவிட்டீஸிலா?" என்றான் கணேஷ்.
"இல்ல.. கல்பனா ஸ்பின்ஸ்டரா?" என்றான் வசந்த்.
கணேஷ், "நீ காலையிலேயே உத படப் போற. வா சீக்கிரம்" என்று இணைப்பைத் துண்டித்தான்.
வசந்த் வருவதற்குள் கொஞ்சம் கணேஷ் பற்றி, இன்னைய தேதியில் சிட்டியில் லீடிங் லாயர், ரொம்ப ஜீனியஸ், எடுத்த கேஸை ஜெயிக்காமல் விட்டதில்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் அறிவிற்கேற்ற பெண் இன்னும் கிடைக்கவில்லை.
மனைவி என்பவள் "இவனைக் கவனித்து, சிசுருஷை செய்து, கலவி கொண்டு, சண்டை போட்டு முடிகிற விஷயமில்லை, அது சீக்கிரம் போர் அடிக்கும். தனக்கு நிகராக தன் எண்ணங்களையும் பகிர்ந்து விவாதிக்க ஒரு துணை வேண்டும்" என்பான்.
முப்பதாவது நிமிட முடிவில் வசந்த் வந்தான்.
"ரெடியா பாஸ்? போலாமா?" என்றான்.
சரக்கென்று கியரை மாற்றி விசுக்கென்று காரை கிளப்பினான். மருத்துவமனையை அடைந்த போது அங்கிருந்த செக்யூரிட்டி முனீஸ்வரன் போல மீசை வைத்து நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமத்தோடு அமர்ந்திருந்தார். இவர்களின் காரை கண்டவுடன் எழுந்து வந்து வணக்கம் வைத்து எங்கே பார்க் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உயரத்தை அருகில் பார்த்துவிட்டு, முனீஸ்வரனிடம் மானசீகமாக சாரி சொல்லிவிட்டு படிகளில் ஏறினான் கணேஷ்.
கம்ப்யூட்டரில் ஏதோ உள்ளீடு செய்து கொண்டிருந்த ரிசப்ஷனிஸ்ட் கணேஷைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்துவிட்டு, அவனுடைய விவரங்களைக் கேட்டு ஒரு பார்மில் குறித்துக் கொண்டு காத்திருக்க சொன்னாள்.
கணேஷ் காத்திருக்கும்போது வசந்த் வந்து இணைந்து கொண்டான். கணேஷ் பெயரை அழைத்துக் கொண்டு இன்னொரு பெண் வந்தாள்.
அவள் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, "இந்த பொண்ணு ரெட் கார்பெட் இல்லாமலே கேட் வாக் பண்ணுது பாஸ்" என்றான் வசந்த்.
"நேத்து ராத்திரி கூட இதே மாதிரி ஒரு பொண்ணு நடந்து வந்ததை F TV யில பாத்தேன். என்ன.. இந்த பொண்ணு நெறய துணி போட்ருக்கு" என்றான்.
"டேய்.. உன்ன கண்டிக்க ஆள் இல்லாம திரியிற" என்றான் கணேஷ்.
கணேஷை அழைத்துக் கொண்டு போய் ஸ்நெல் சார்ட்டைக் காட்டி கண்ணில் மையோபியாவா இல்லை ஹைபெரோப்பியவா என்று செக் செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
கணேஷுக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், அவர் அப்பாவை அழைத்துக் கொண்டு கண் டாக்டரிடம் போன ஜோக் ஞாபகம் வரவே வேறு பக்கம் பார்த்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
கண்ணில் ட்ராப்ஸ் விட்டு டைல்யூட் செய்து செக் செய்ய வேண்டும் என்று சொல்லவே, வெளியே வந்து காத்திருந்தான்.
கணேஷின் கண்களில் டைலியூடிங் சொலுயூஷன் விட்டு காத்திருந்த போது
"பாஸ், கண்ணை டைலியூட் செய்து பார்ப்பது போல மனசையும் பார்க்க முடியுமா?" என்றான் வசந்த்
"முடியுமே! ஹிப்னாடிசம் மூலமாக" என்றான் கணேஷ்
"அப்டினா.. எலக்க்ஷனுக்கு முன்னாடி எல்லா கண்டஸ்டண்ட்டையும் ஹிப்னாடைஸ் பண்ணி அவங்க எதுக்கு எலெக்ஷன்-ல நிக்கிறாங்கன்னு செக் பண்ணிடலாமே ?" என்றான் வசந்த்
"அது தான் இல்ல... நம்ம அரசியல்வாதிங்க, ஹிப்னாடைஸ் பண்றவருக்கு குடுக்க வேண்டியத குடுத்து ஹிப்னாடைஸ் பண்ணாமலே, ஹிப்னாடைஸ் ஆனமாதிரி நடிச்சு மக்களுக்கு நல்லது செய்யத்தான் எலெக்க்ஷன்-ல நிக்கிறேன்னு சொல்லுவாங்க. நம்ம மக்களும் அத நம்பி புளகாங்கிதம் அடஞ்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சுட்டு பத்து நாள்ல பாய பிறாண்ட ஆரம்பிச்சுடுவாங்க" என்றான் கணேஷ்.
"அப்ப ஊழலை ஒழிக்கவே முடியாதா பாஸ் ?" என்றான் வசந்த்
"ஜீன் அளவில ஏதாவது மாத்தினா தான் உண்டு " என்றான் கணேஷ்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் IOL லிக்விட் பிரஷர் செக் செய்ய வேண்டுமெனக் கூறி கணேஷை கூட்டிச்சென்று, டோனோமீட்டர் முன்னே அமர வைத்து தாடையை ஒட்ட வைத்து பின், "பாப்" என்ற ஒலியோடு கண்ணில் ஒரு ஏர் பப்பில் வந்து அடித்து அளவீடுகளை எடுத்துவிட்டு காத்திருக்க சொன்னார்கள்.
அனைத்து டெஸ்டும் முடிந்த பின்னே டாக்டர் கல்பனாவை பார்க்க அவரின் அறைக்கு சென்றனர். அவர் ஒற்றை நாடியோடு பழைய நடிகை மீனாகுமாரியை நினைவு படுத்தினார்.
"உட்காருங்க கணேஷ்" என்று பேஷன்ட்-க்கான இருக்கையை காட்டினார் டாக்டர் கல்பனா
"டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் நார்மலா இருக்கு. உங்கள் கண்களை நானும் ஒருமுறை செக் செய்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, "என்னோட லெப்ட் இயர பாருங்க" என்று சொல்லி ஒரு பிரிஸம் வழியாக கணேஷின் வலது கண்ணையும் "ரைட் இயர்" என்று இடது கண்ணையும் செக் செய்துவிட்டு, "பாக்டீரியல் இன்பெக்ஷன் அது தான் கஞ்ஜெக்ட்டிவிட்டீஸ். ஆன்டி பாக்டீரியல் கிரீமும் ஒரு ட்ராப்ஸ்சும் பிரஸ்கிரைப் செய்றேன். இட் வில் பி ஆல்ரைட் இன் கபுல் ஆப் டேஸ் " என்றார்.
"ஓகே மேடம் தேங்க் யூ " என்றான் கணேஷ்.
"எனக்கு ஒரு டவுட்" என்றான் வசந்த்
அவனை வினாக்குறியோடு கணேஷ் பார்க்க
"இதுவும் மெடிக்கல் கவுன்சிலில் ரூல்சா மேடம் ?" என்றான் வசந்த்.
"எது ?" என்றார் டாக்டர்.
"வைரக்கம்மல் போட்டுகிறதுதான். எங்க பாஸ்-ஐ உங்களின் லெப்ட், ரைட் இயர் பாக்க சொல்லும்போது நானும் பார்த்தேன். பேஷன்ட் பாக்க ஈஸியா இருக்கும்னு போட்ருக்கீங்களா?" என்றான் வசந்த்.
"டேய்... சும்மா இருக்க மாட்டியா?..." என்று அதட்டிவிட்டு , "தேங்க் யூ அகைன்" என்றான் கணேஷ்.
கபாலிக்கு தெரிந்தால் "வாத்யாரே! மெட்ராஸ் ஐ-னு ரீஜண்ட்டா சொல்லாம, கஞ்சக்ட்டி, பஞ்சக்ட்டி னு டபாய்க்காதே வாத்யாரே" என்பான் என்று நினைத்து சிரித்துக் கொண்டே ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தான் கணேஷ் வசந்தோடு..