Saturday, April 15, 2023

மகிழ்ச்சி

 மனதின் குதூகலம்

மழலையின் சிரிப்பு

மற்றவரின் வாழ்த்து


வாழ்க்கையில் முன்னேற்றம்

வானின் நிறமாற்றம் 

வாழ்வில் அன்பின் பரிமாற்றம்


இவையனைத்தும் மகிழ்வென்பேன்

எனினும் மற்றவர் வாழ்வில்

ஒளியேற்றும் மகிழ்வே

எதனினும் தலை என்பேன்...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

 சித்திரையின் பொன்மகளே 

இத்தரையின் நன்மகளே - வாழ்வில் 

முத்திரை பதித்திடவே - எம் மக்கள் 

நித்திரை கலைத்திடம்மா...


காவிரியின் கரையிலும் 

பாய்மரத்து களத்திலும் 

சேய்நிலத்து மண்ணிலும் 

காய்வெயில் மணலிலும் 

தூய்மனத்து எம்மக்கள் 

நோய்இன்றி வாழ்ந்திடவே 

தாய்போல அருளம்மா..    


ஆன்றோர்கள் அருளிய 

ஆத்திச்சூடியும்  குறளும் 

ஆக்கையும் உயிரும் போல 

ஆள்வோர்கள் கைக்கொள்ள 

ஆசிகள் வழங்கிடம்மா...   


ஈரடிக் குறளும் கீழடி குரலும் 

ஓரணியாய் மா நிலத்தில் 

மாட்சியோடு வாழ்ந்திருக்க 

பீதக அரிசியும் வீ யும் கொண்டு 

பூசை செய்கின்றோம் - எங்கள் 

ஆசைகளை மெய்யாக்கம்மா...


அனைவருக்கும் 

இனிய தமிழ் புத்தாண்டு 

வாழ்த்துக்கள்

 


* பீதகம் - மஞ்சள் 

* வீ  - மலர்  

* ஆக்கை  - உடல்

Saturday, March 11, 2023

ஓகே, ஃபைன்

மார்கழி மாதத்து அதிகாலை, தெரு நாய்கள் எல்லாம் வாலை சுருட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் தூக்கத்தை கெடுத்தபடி, ஒரு Ola ஆட்டோ அந்த அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது. அந்த ஆட்டோ டிரைவர் போனை எடுத்து கஸ்டமர் பெயர் "இராஜேந்திரன்" என்று இருந்ததைப் பார்த்துவிட்டு டயல் செய்து, அட்டெண்ட் செய்யப்பட்டவுடன், "சார், நான் வந்து விட்டேன்" என்றார். "ஓகே, ஃபைன்.. இதோ வந்து விட்டேன்" என்று எதிர்முனையிலிருந்து குரல் கேட்டது..

சிறிது நேரத்தில் நல்ல உடல்வாகுடன் ஒரு இளைஞன் வந்து ஆட்டோவில் ஏறினான். "சார், நீங்கள் தான் முதல் சவாரி, அது மட்டுமில்லாம இந்த அதிகாலைல இந்த குளிர்ல வந்திருக்கேன்.. ஒரு 50 ரூவா சேத்துப் போட்டு குடுங்க சார்.." என்றார் டிரைவர். அவரை அந்த இளைஞன் மேலும் கீழும் பார்த்து விட்டு "ஓகே, ஃபைன்" என்றான். மன நிறைவோடு, OTP எண்ணை உறுதி செய்து விட்டு, டிரைவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

போகும் வழியில், ரோட்டில் போட்டிருந்த மஞ்சள் சதுரங்களைப் பார்த்து விட்டு, அந்த இளைஞன் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே "அதெல்லாம் தெரியாது தம்பி..." என்றார். கொஞ்ச தூரத்தில் இருந்த ரெட் சிக்னலில் நிற்காமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டே "இந்த நேரத்துல ஏந்தான் சிக்னல் போடுறாங்களோ?? தெரியல.. யாரு தான் நிப்பா??" என்றார். அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே "ஓகே, ஃபைன்" என்றான்.

அந்த இளைஞன் இறங்க வேண்டிய இடம் வந்ததும், வண்டியை நிப்பாட்டினார் ஆட்டோ டிரைவர். பயணத்திற்கான தொகையை மொபைல் ஆப்-பில் பார்த்து விட்டு, அதோடு 50 ரூபாய் சேர்த்து கொடுத்துவிட்டு "ஓகே?" என்றான்.  "ஓகே தம்பி" என்று சொல்லி விட்டு திரும்பியவரை, "ஒரு நிமிஷம்.." என்று கூறி இரண்டு பேப்பரை கையில் கொடுத்தான் அந்த இளைஞன். ஆட்டோ டிரைவர் புரியாமல் பார்க்கவே, "ஃபைன்" என்று சொன்னான். அதிர்ச்சியடைந்த டிரைவர், பேப்பரை வாங்கிப் படித்தார்.

இராஜேந்திரன் IPS, போக்குவரத்து காவல் ஆணையர்  என்ற தலைப்புடன் கூடிய அந்த பேப்பர், "மோட்டார் வாகன சட்டம் எண்...." என்று தொடங்கி, "கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்டதற்கும், சாலை விதிகளை முழுமையாக தெரிந்து கொள்ளாததற்கும், சிவப்பு விளக்கு சமிக்கையில் நிற்காததற்கும் என மூன்று வகைகளில் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக தண்டக் கட்டணத்தை 3 நாட்களுக்குள் கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தது.          

இன்னொரு பேப்பரில், அதிகாலையில் சிக்னலில் நிற்காமல் சென்ற வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளை பற்றிய விபரம் இருந்தது.



ஆகவே இக்கதையை படிக்கும் நீங்களும், அதிகாலை நேரமானாலும் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்தி விட்டு, பச்சைக்கு மாறிய பின் செல்லுங்கள். ஏனெனில் "மனித உயிர் விலைமதிப்பற்றது".

ஓகே. ஃபைன்?  

Tuesday, February 7, 2023

நமது குடியரசு

மன்னராட்சி முடிந்ததென்று தோள் கொட்டடி 

குடியாட்சி மலர்ந்ததென்று தோள் கொட்டடா 


வாரிசு வழி தலைமை முடிந்ததென்று தோள் கொட்டடி 

தகுதி வழி  தலைமை வந்ததென்று தோள் கொட்டடா 

ஆள்பவரே மன்னர் என்பது மறைந்ததென்று தோள் கொட்டடி 

அனைவருமே  மன்னர் என்ற நிலை வந்ததென்று தோள் கொட்டடா 


மக்களாட்சியில் நாம் முதன்மை என்று தோள் கொட்டடி 

மக்கள் சக்தியில் நாம் முதன்மை என்று தோள் கொட்டடா 

கணினியிலும் நாம்தான்  முதல் என்று தோள் கொட்டடி 

எண்மவணிகத்திலும் நாம் முதல் என்று தோள் கொட்டடா 

கனிமவளத்திலும் நாம்தான்  முதல் என்று தோள் கொட்டடி 


பண்பாட்டிலே பாரினிலே முதல் என்று தோள் கொட்டடா 

கண்டம் விட்டு கண்டம் செல்ல வழி கண்டோம் என்று தோள் கொட்டடி 

விண்வெளியை ஆராய கலம் கண்டோம் என்று தோள் கொட்டடா 

அமெரிக்காவும் சீனமும் நம் நட்பென்று தோள் கொட்டடி 

இரசியாவும் நம் துணையென்று தோள் கொட்டடா 


விடுதலை வீரர் உதிரத்திலே மலர்ந்ததென்று தோள் கொட்டடி 

விண்முட்டும் புகழ் கொண்டோம் என்று தோள் கொட்டடா 

உப்பைக் கொண்டு தப்பை சரி செய்தோம் என்று தோள் கொட்டடி 

அகிம்சை வழி சரியென்று கண்டு கொண்டோம் என்று தோள் கொட்டடா 

அனைவருக்கும் இதை உரக்க சொல்வோம் என்று தோள் கொட்டடி 


வேற்றுமையில் ஒற்றுமையே நம் வேதம் என்று தோள் கொட்டடா - நம் நாடு 

வெள்ளி விழா நோக்கி வீறு நடை போடுதென்று தோள் கொட்டடி