Thursday, August 20, 2020

விஜயனின் விசனம்

அத்தினாபுரம் 
அங்கமெல்லாம் 
அணு அணுவாய் 
அளவற்ற உற்சாகம் 
அப்பிக்கிடந்த வேளை... 

மாண்ட 
பாண்டுவின் 
புத்திரர்களும்; அவர்தம்மை 
சத்துருவாக எண்ணும் 
மித்திரர்களும் 
குருகுலம் முடித்து 
தம்குலக் கீர்த்தி பெருக 
அரண்மனை வந்த வேளை... 

நான் மறையக் கற்ற குருவிடம் 
நான்  மறைகளும் 
நாண் மறையும் கற்று 
நமணர்களை வெல்வோம் என்று 
நல்லுறுதி  தந்து 
உள்ளுறுதி கொண்டு 
நகர்வந்த வேளை... 

குந்தி புத்திரர்கள் 

குந்தி 
முந்தி பெற்ற 
வரம் 
கரம், சிரம் முளைத்து 
சந்திரகுல கீர்த்தி மேவ 
சகத்தினில் கொண்டது வாழ்வு 

1. 
பால பருவத்தில் 
அகால பருவத்தில் 
ஆதவன் அருளால் 
கிரணன் வழி வந்தான் 
கர்ணன். 
கோடையின் 
காரணன் மகன் 
கொடையின் பூரணன்.
நின்றாள்! 
அதை நதிகண் தந்து
தன் விதி, கதி நொந்து...

2.
ஊரறிய 
உலகறிய 
அவள் பெற்ற 
முதற்பிள்ளை 
தென்னவனின்  
அருட்பிள்ளை. 
அதற்கு 
சத்தியமே வாக்கு, வாழ்க்கை 
இக்கரையில் அவன் பெயர் 
உதிட்டிரன். 

3.
அடுத்த பிள்ளை 
வளி 
வழி வந்தது. 
வலி மிகுந்தது. 
அவனொரு 
வீரன் 
சூரன் 
அவன் பெயர் 
பீமன் 
சமரில் எதிர்ப்போரை - தன் 
மூத்தோனின்  தாதை 
செலுத்தும் பாதை. 

4.
விரலிலும் 
வீரத்திலும் 
தீரத்திலும் 
நடுவில் உள்ளது உயர்த்தி. 
இந்திரனின் அருளால் 
சந்திரகுல கீர்த்தியை 
சகத்தினில் 
சடுதியில் உயர்த்திய 
விஜயன். 

அசுவினி குமாரர் 
அருளால் 
அடுத்து வந்தவர் 
நகுலன், சகாதேவன். 

5.
நகுலன் 
பகன்றால் 
புள்ளும் கேட்கும் 
புரவியும் கேட்கும் 

6.
ஒருவன் 
ஏட்டை பார்த்தால் 
பட்டென 
பகர்வான் - அது 
சாதகமா இல்லை 
பாதகமா என 
சடுதியில் 
சகாதேவன். 

விஜயனின் விசனம் 
அச்சுதனை 
அர்ச்சித்த 
அர்ச்சுனன் 
அகண்ட பாரதத்தில் 
அவன் செல்லாத நிலமில்லை 
அவன் வெல்லாத களமில்லை. 

எங்கு செல் 
விஜயன் வில் 
கொணரும் சொல் 
வெல்!

சிலை 
வளைத்து குறி வைத்தால் 
விலையின்றி - தன் 
நிலைமாற்றி - பல் 
கலை கற்ற 
தனஞ்செயன் வசம் 
வெற்றி க(ன்)னி.

ஊரார், 
சான்றோர் 
போற்றினர் 
ஜெயம் என்பது - தனஞ் 
ஜெயன் வசமுள்ள 
அம்பில் 
ஒன்றென்று. 

நன்று 
பயின்ற 
தனுர்வித்தை; 
மெய்ப்பித்தது 
அவன் வெற்றி 
எனும் வி(த்)தை. 
  
சகலமும் வெற்றி எனில்
எவருக்கும் 
கர்வம் 
சிரமேறும்  - ஆனால் 
பார்த்தன் கிஞ்சித்தும் 
மனதில் ஏற்றவில்லை. 
தொழுதான் 
தன் கரம் ஏற்றவில்லை... 

ஆயினும் 
சலிப்பு 
சம்மணமிட்டது 
குந்தி கர்ப்பம் 
வந்த 
புந்தி... 

சகத்ரட்சகனும் 
சகோதரரும் 
அளவளாவும் வேளை, 
காண்டீபன் 
சொன்னான் ஒரு 
தகவலை...

மைத்துனனை 
கைத்துணையாய் 
பெற்றவன் - திரவுபதி 
கைத்தலம் 
பற்றியவன் - ஆயினும் 
மையூரத்தின் 
தூவியை - முன் தலையில் 
சூடியவனனின் தாள் 
பணிந்து 
பகன்றான் 
தன்கருத்தை..

ஓராறு மாதம் 
தான் போவேன் 
மற்றை தேசம். 
தான் யாரென அறியா 
தூரதேசம். 
காரணம் தன் 
புத்தியின் வேசம் 
காட்டேன் 
யாரிடமும் துவேசம்..

ஓரைந்து பேரில் 
ஒருத்தன் மட்டும் 
பிரிந்து சென்றால் 
ஊர்பேசும் பேச்சு. 
மெல்லும் 
வெறும் வாய்க்கு 
அவலென்று ஆச்சு. 
மறுத்தான் 
எமதரும மைந்து...

எமதரும மைத்து !
ஒன்று சொல்வேன் 
நன்று.
கள்வித்தை 
முனைவு காணில் - அது 
கொணரும் 
கர்வத்தை.
பின்னே 
சிந்தை 
கந்தை. 
அது பேணாது 
வித்வத்தை 
குதூகலிக்கும் 
வாய்வித்தை...

காண்டீபன் மனம் 
கிஞ்சித்தும் 
சீண்டவில்லை 
துர்க்குணம் - காரணம் 
அவன் 
வாசவன் வி(த்)தை.   

காண்டீபன் செல்ல 
தருவாய் அனுமதி 
அது கூட்டும் 
அவன் ஆன்ம அனுபூதி. 
ஆதரித்தான் 
ஆநிரை மேய்த்த 
ஆன்றோன்...

கோவர்த்தன பருவதத்தை 
கோவென 
கொட்டும் மழையில் 
குடையாய் பிடித்தவன் 
காளிங்கன் மேல் 
ஆனந்த நர்த்தனம் செய்தவன் 
ஆவண செய்ய 
அட்டியின்றி வழங்கினான் 
சம்மதம் 
தருமத்தை 
எம்மதம் என்றவன். 
வாய்மை எனும் 
வழியில் கோணாது 
நின்றவன்.
 
அருச்சுனா!
பல வித்தை 
நின் நிறை. 
நீ யாரென 
செல்லுமிடம் மறை. 
உனை 
பிடித்துக் கேட்டினும் 
இடித்துக் கேட்டினும் 
அடித்துக் கேட்டினும் 
பகர்வாய் 
தானொரு உதவாக்கரை. 

அக்கரையில் 
நின்றனுக்கு 
கிடைக்கலாம் 
சிலகறை இருப்பினும் 
அக்கறை காட்டாதே 
அக்கறை... 
 
நீ சேருமிடம் 
சொல்லாதே 
நின் இடம். 
ஏந்திலை 
சொல்லலாம் 
மறுதலை.
தெரிவித்தான் 
மதுசூதனன். 

மாதவா !
மறைகள் போற்றும் 
மா தவா !
நின் புகழை 
நான் ஓதவா ?
அஃது என் 
பேரவா - ஆயின் 
என் மொழி 
போதவா 
நின் அருள் இடம் 
என் இடம் 
அதன்முன் 
கடும் விடம் 
ஓடும் - தன் 
அமைவிடம் .

மகத கானகம் 
வாசவன்  மகன் 
வசுதேவன் மகன் 
வசம் 
வாழ்த்துப் பெற்று 
வந்தான் 
மற்றொரு தேசம் - அது 
மகத நாட்டின் 
மற்றொரு கோடி - ஆங்கு 
அவன் காணவில்லை 
மக்கட்பேடி... 

நாடுநகர் - அவன் 
நாடவில்லை 
கைவிட    வில்லை 
கணைவிடும் வில்லை...

புகுந்தான் கானகம் -அஃது 
அசப்பில் ஒரு வானகம் 
ஆரண்யத்தின் 
ஆரண்யம் - ஜீவ 
காருண்யம்... 

கானக்குயிலோசை 
கந்தர்வர் பாடலிசை 
அடவியின் கதி 
அரம்பையர் சுதி 
மந்தியின் அலப்பல் 
மத்தளத்தின் சிலும்பல் 
மஞ்ஞையே  - நடன 
மங்கையாய் 
மனதை 
மயக்க 
மனை 
மறந்து    
தனை கரைத்தான் 
வனத்திலே 
விஜயன்...

கானகத்திலே 
காண்டீபன் 
இருந்தான் 
விச்சிராந்தியாய் 
திரிந்தான் 
விட்டேத்தியாய் 

வம்பு, அம்பு, அன்பு 
அய்ந்தறிவு மக்கள் 
அசூயையின்றி 
அவரவர் வேலை 
பார்க்கும் வேலை 
வந்தது வம்பு 
காரணம் ஓர் அம்பு! 

கரியும் 
அரியும் 
கணப்பொழுதில் 
பொருதி 
மீண்டு 
மீண்டு 
பொருதிய 
யுத்த சூழல் - அதன் 
சத்தம் கேட்டு 
சடுதியில் வந்தான் 
தனஞ்செயன் 
விஜயன் 
வில்லேந்தி... 

கரியை 
காக்க 
தொடுத்தான் 
கணை. 
அதன் முனை 
அரி தொடும் முனை, 
உடைந்தது அதன் முனை 
காரணம் 
மற்றொரு கணை. 

விடுத்தான் 
மற்றொரு கணை. 
அதற்கும் வந்தது 
அணை அனை 
அணை. 

விதிர்விதிர்த்தான் 
வில்லாளி 
வறண்டது அவன் 
சொல்லாழி... 

தன் அன்புக்கு 
பதில்  அன்பு 
ஏற்கும் மனம்.
தன் அம்புக்கு 
பதில் அம்பு 
ஏற்காது மனம் 
ஏறியது சினம்  - சூழல் 
மாறியது கணம்... 

போட்டி கணை 
விட்டவனை 
போட்டியாக 
நினைக்க செய்தது 
அவனை 
விடாத வினை... 

மரத்தின் கண் 
வெளிப்பட்டான் 
ஓர் வனமகன் 
இந்திரன் மகன் முன்... 

அழைத்தான் காண்டீபன் 
அவனை போட்டிக்கு.. 
தன் குலகீர்த்தியின் 
ஏட்டிக்கு... 

காண்டீபன் 
கரம் வளைத்து 
விட்டான் கணை 
அது சென்றது 
பத்துப்பனை... 

வனமகன் 
தொடுத்தான் 
பாணம் - அது 
காண்டீபன் 
அம்பிற்கு 
சரிநிகர் சமானம்... 

ஆயினும் 
அமரேந்திரன் மகன் 
கவனித்தான் ஒன்று 
அஃது அவன் செய் நன்று... 

வனமகன் 
தொடுத்த கணை 
பெருவிரல் விட்டு விட்டு 
அதைக்கண்டு 
விஜயன் ஆவி 
நீங்கி மீண்டது 
உடல் விட்டு விட்டு... 

அவன் மனம் 
சொல்லியது ஈண்டு 
மனம்விட்டு போனது 
வெற்றி தந்த 
எரிச்சல் கழண்டு... 

விடுத்தான் 
வில்லை 
அழைத்தான் 
வனமகனை 
பெருவிரல் 
தொடாத பாணம் 
ஆயினும் தன் 
சரிநிகர் 
சமான பாணம்... 

வனமகன் இயம்பினான் 
பேருண்மை 
அவன் குருவின் 
விரல் வன்மை 
காண்டீபனை 
சுட்டது 
சொல்லொணாக் கொடுமை... 

ஏகலைவன் 
அர்ச்சுனன் 
கேட்டான் இறைஞ்சு 
வனமகன் குரு நாமம் 
சொன்னான் 
ஏகலைவனென்று... 

அற்றை நாளில் 
காணாது 
கணையெய்து 
வியப்பில் 
ஆழ்த்தியவன்! 
தன் குரு 
காணிக்கையாய் 
கட்டைவிரல் 
தந்து தனை 
அச்சத்தில் 
ஆழ்த்தியவன் !
அதனால் தனை 
உச்சத்தில் 
ஏத்தியவன்! 
இருக்கிறான் 
குருவாக 
உதிரவில்லை 
பருவத்து மருவாக... 

உன்மத்தம் 
உச்சந்தலையில் ஏற 
வேண்டினான் 
அவனை. 
தனை 
அழைத்துச்செல்ல 
அவன் குருவிடம் 
அவர்தம் அமைவிடம்...

கட்டைவிரல் 
தந்து 
நெட்டை புகழ் 
பெற்றவனை 
ஆண்டு  பல 
கண்டு 
அளவிலா 
இன்பம் கொண்டு 
அர்ச்சுனன் 
புகழ்ந்தான் 
ஏகலைவனை...

வாழ்த்தினான் 
வனமகனை  - தன் 
மனம் தனை 
மாற்றியவனை
அல்லிலும் 
அம்பெய்யும் 
அற்புதம் 
அவன்குருவின் கண் 
தான் பெற்ற 
தத்துவத்தை 
தாத்பர்யத்தை 
உத்வேகத்தை 
என போற்றினான் 
அவன் மகத்துவத்தை... 

ஏகலைவன் 
கண்ட மாத்திரம் 
புரிந்தான் 
வந்தவன் 
தன் 
மானசீக குருவின் 
மாணாக்கனென்று... 

அர்ச்சுனன் 
இயம்பினான் 
கட்டை விரலின்றி 
கணை செலுத்தும் 
கலை 
அட்டியின்றி 
அவன் வன்மைக்கு 
 சமநிலை... 

அழிந்தது 
தன் வெற்றி எரிச்சல், 
இறுமாப்பு... 
தனை வெல்ல 
சகத்தினில் உண்டு 
ஒரு மாப்பு... 

ஏகலைவன் 
சொன்னான் 
நின் குரு  நிறை 
அவர் நடமாடும் இறை... 

என் வில் 
கொள் கணை 
செல்லும் 
பத்துப்பனை -ஆயின் 
உன் அம்பு கொளும்  
கை தொழும் 
தெய்வந்தனை. 
அஃது வராது என் 
அம்பு முனை 
ஆகையால் 
நீ தான் வில்லின் இறை 
இது என் மேல் ஆணை... 

இறைஞ்சி 
கூப்பிட்டும் 
தன்னோடு 
வராத 
மித்திரனை 
விசித்திரனை 
வாழ்த்திவிட்டு 
புறப்பட்டான் 
விஜயன் 
தன் அகம் நோக்கி, 
தன் அகம் பல 
நல்ல நிகழ்வுகளை தேக்கி...