Thursday, August 20, 2020

விஜயனின் விசனம்

அத்தினாபுரம் 
அங்கமெல்லாம் 
அணு அணுவாய் 
அளவற்ற உற்சாகம் 
அப்பிக்கிடந்த வேளை... 

மாண்ட 
பாண்டுவின் 
புத்திரர்களும்; அவர்தம்மை 
சத்துருவாக எண்ணும் 
மித்திரர்களும் 
குருகுலம் முடித்து 
தம்குலக் கீர்த்தி பெருக 
அரண்மனை வந்த வேளை... 

நான் மறையக் கற்ற குருவிடம் 
நான்  மறைகளும் 
நாண் மறையும் கற்று 
நமணர்களை வெல்வோம் என்று 
நல்லுறுதி  தந்து 
உள்ளுறுதி கொண்டு 
நகர்வந்த வேளை... 

குந்தி புத்திரர்கள் 

குந்தி 
முந்தி பெற்ற 
வரம் 
கரம், சிரம் முளைத்து 
சந்திரகுல கீர்த்தி மேவ 
சகத்தினில் கொண்டது வாழ்வு 

1. 
பால பருவத்தில் 
அகால பருவத்தில் 
ஆதவன் அருளால் 
கிரணன் வழி வந்தான் 
கர்ணன். 
கோடையின் 
காரணன் மகன் 
கொடையின் பூரணன்.
நின்றாள்! 
அதை நதிகண் தந்து
தன் விதி, கதி நொந்து...

2.
ஊரறிய 
உலகறிய 
அவள் பெற்ற 
முதற்பிள்ளை 
தென்னவனின்  
அருட்பிள்ளை. 
அதற்கு 
சத்தியமே வாக்கு, வாழ்க்கை 
இக்கரையில் அவன் பெயர் 
உதிட்டிரன். 

3.
அடுத்த பிள்ளை 
வளி 
வழி வந்தது. 
வலி மிகுந்தது. 
அவனொரு 
வீரன் 
சூரன் 
அவன் பெயர் 
பீமன் 
சமரில் எதிர்ப்போரை - தன் 
மூத்தோனின்  தாதை 
செலுத்தும் பாதை. 

4.
விரலிலும் 
வீரத்திலும் 
தீரத்திலும் 
நடுவில் உள்ளது உயர்த்தி. 
இந்திரனின் அருளால் 
சந்திரகுல கீர்த்தியை 
சகத்தினில் 
சடுதியில் உயர்த்திய 
விஜயன். 

அசுவினி குமாரர் 
அருளால் 
அடுத்து வந்தவர் 
நகுலன், சகாதேவன். 

5.
நகுலன் 
பகன்றால் 
புள்ளும் கேட்கும் 
புரவியும் கேட்கும் 

6.
ஒருவன் 
ஏட்டை பார்த்தால் 
பட்டென 
பகர்வான் - அது 
சாதகமா இல்லை 
பாதகமா என 
சடுதியில் 
சகாதேவன். 

விஜயனின் விசனம் 
அச்சுதனை 
அர்ச்சித்த 
அர்ச்சுனன் 
அகண்ட பாரதத்தில் 
அவன் செல்லாத நிலமில்லை 
அவன் வெல்லாத களமில்லை. 

எங்கு செல் 
விஜயன் வில் 
கொணரும் சொல் 
வெல்!

சிலை 
வளைத்து குறி வைத்தால் 
விலையின்றி - தன் 
நிலைமாற்றி - பல் 
கலை கற்ற 
தனஞ்செயன் வசம் 
வெற்றி க(ன்)னி.

ஊரார், 
சான்றோர் 
போற்றினர் 
ஜெயம் என்பது - தனஞ் 
ஜெயன் வசமுள்ள 
அம்பில் 
ஒன்றென்று. 

நன்று 
பயின்ற 
தனுர்வித்தை; 
மெய்ப்பித்தது 
அவன் வெற்றி 
எனும் வி(த்)தை. 
  
சகலமும் வெற்றி எனில்
எவருக்கும் 
கர்வம் 
சிரமேறும்  - ஆனால் 
பார்த்தன் கிஞ்சித்தும் 
மனதில் ஏற்றவில்லை. 
தொழுதான் 
தன் கரம் ஏற்றவில்லை... 

ஆயினும் 
சலிப்பு 
சம்மணமிட்டது 
குந்தி கர்ப்பம் 
வந்த 
புந்தி... 

சகத்ரட்சகனும் 
சகோதரரும் 
அளவளாவும் வேளை, 
காண்டீபன் 
சொன்னான் ஒரு 
தகவலை...

மைத்துனனை 
கைத்துணையாய் 
பெற்றவன் - திரவுபதி 
கைத்தலம் 
பற்றியவன் - ஆயினும் 
மையூரத்தின் 
தூவியை - முன் தலையில் 
சூடியவனனின் தாள் 
பணிந்து 
பகன்றான் 
தன்கருத்தை..

ஓராறு மாதம் 
தான் போவேன் 
மற்றை தேசம். 
தான் யாரென அறியா 
தூரதேசம். 
காரணம் தன் 
புத்தியின் வேசம் 
காட்டேன் 
யாரிடமும் துவேசம்..

ஓரைந்து பேரில் 
ஒருத்தன் மட்டும் 
பிரிந்து சென்றால் 
ஊர்பேசும் பேச்சு. 
மெல்லும் 
வெறும் வாய்க்கு 
அவலென்று ஆச்சு. 
மறுத்தான் 
எமதரும மைந்து...

எமதரும மைத்து !
ஒன்று சொல்வேன் 
நன்று.
கள்வித்தை 
முனைவு காணில் - அது 
கொணரும் 
கர்வத்தை.
பின்னே 
சிந்தை 
கந்தை. 
அது பேணாது 
வித்வத்தை 
குதூகலிக்கும் 
வாய்வித்தை...

காண்டீபன் மனம் 
கிஞ்சித்தும் 
சீண்டவில்லை 
துர்க்குணம் - காரணம் 
அவன் 
வாசவன் வி(த்)தை.   

காண்டீபன் செல்ல 
தருவாய் அனுமதி 
அது கூட்டும் 
அவன் ஆன்ம அனுபூதி. 
ஆதரித்தான் 
ஆநிரை மேய்த்த 
ஆன்றோன்...

கோவர்த்தன பருவதத்தை 
கோவென 
கொட்டும் மழையில் 
குடையாய் பிடித்தவன் 
காளிங்கன் மேல் 
ஆனந்த நர்த்தனம் செய்தவன் 
ஆவண செய்ய 
அட்டியின்றி வழங்கினான் 
சம்மதம் 
தருமத்தை 
எம்மதம் என்றவன். 
வாய்மை எனும் 
வழியில் கோணாது 
நின்றவன்.
 
அருச்சுனா!
பல வித்தை 
நின் நிறை. 
நீ யாரென 
செல்லுமிடம் மறை. 
உனை 
பிடித்துக் கேட்டினும் 
இடித்துக் கேட்டினும் 
அடித்துக் கேட்டினும் 
பகர்வாய் 
தானொரு உதவாக்கரை. 

அக்கரையில் 
நின்றனுக்கு 
கிடைக்கலாம் 
சிலகறை இருப்பினும் 
அக்கறை காட்டாதே 
அக்கறை... 
 
நீ சேருமிடம் 
சொல்லாதே 
நின் இடம். 
ஏந்திலை 
சொல்லலாம் 
மறுதலை.
தெரிவித்தான் 
மதுசூதனன். 

மாதவா !
மறைகள் போற்றும் 
மா தவா !
நின் புகழை 
நான் ஓதவா ?
அஃது என் 
பேரவா - ஆயின் 
என் மொழி 
போதவா 
நின் அருள் இடம் 
என் இடம் 
அதன்முன் 
கடும் விடம் 
ஓடும் - தன் 
அமைவிடம் .

மகத கானகம் 
வாசவன்  மகன் 
வசுதேவன் மகன் 
வசம் 
வாழ்த்துப் பெற்று 
வந்தான் 
மற்றொரு தேசம் - அது 
மகத நாட்டின் 
மற்றொரு கோடி - ஆங்கு 
அவன் காணவில்லை 
மக்கட்பேடி... 

நாடுநகர் - அவன் 
நாடவில்லை 
கைவிட    வில்லை 
கணைவிடும் வில்லை...

புகுந்தான் கானகம் -அஃது 
அசப்பில் ஒரு வானகம் 
ஆரண்யத்தின் 
ஆரண்யம் - ஜீவ 
காருண்யம்... 

கானக்குயிலோசை 
கந்தர்வர் பாடலிசை 
அடவியின் கதி 
அரம்பையர் சுதி 
மந்தியின் அலப்பல் 
மத்தளத்தின் சிலும்பல் 
மஞ்ஞையே  - நடன 
மங்கையாய் 
மனதை 
மயக்க 
மனை 
மறந்து    
தனை கரைத்தான் 
வனத்திலே 
விஜயன்...

கானகத்திலே 
காண்டீபன் 
இருந்தான் 
விச்சிராந்தியாய் 
திரிந்தான் 
விட்டேத்தியாய் 

வம்பு, அம்பு, அன்பு 
அய்ந்தறிவு மக்கள் 
அசூயையின்றி 
அவரவர் வேலை 
பார்க்கும் வேலை 
வந்தது வம்பு 
காரணம் ஓர் அம்பு! 

கரியும் 
அரியும் 
கணப்பொழுதில் 
பொருதி 
மீண்டு 
மீண்டு 
பொருதிய 
யுத்த சூழல் - அதன் 
சத்தம் கேட்டு 
சடுதியில் வந்தான் 
தனஞ்செயன் 
விஜயன் 
வில்லேந்தி... 

கரியை 
காக்க 
தொடுத்தான் 
கணை. 
அதன் முனை 
அரி தொடும் முனை, 
உடைந்தது அதன் முனை 
காரணம் 
மற்றொரு கணை. 

விடுத்தான் 
மற்றொரு கணை. 
அதற்கும் வந்தது 
அணை அனை 
அணை. 

விதிர்விதிர்த்தான் 
வில்லாளி 
வறண்டது அவன் 
சொல்லாழி... 

தன் அன்புக்கு 
பதில்  அன்பு 
ஏற்கும் மனம்.
தன் அம்புக்கு 
பதில் அம்பு 
ஏற்காது மனம் 
ஏறியது சினம்  - சூழல் 
மாறியது கணம்... 

போட்டி கணை 
விட்டவனை 
போட்டியாக 
நினைக்க செய்தது 
அவனை 
விடாத வினை... 

மரத்தின் கண் 
வெளிப்பட்டான் 
ஓர் வனமகன் 
இந்திரன் மகன் முன்... 

அழைத்தான் காண்டீபன் 
அவனை போட்டிக்கு.. 
தன் குலகீர்த்தியின் 
ஏட்டிக்கு... 

காண்டீபன் 
கரம் வளைத்து 
விட்டான் கணை 
அது சென்றது 
பத்துப்பனை... 

வனமகன் 
தொடுத்தான் 
பாணம் - அது 
காண்டீபன் 
அம்பிற்கு 
சரிநிகர் சமானம்... 

ஆயினும் 
அமரேந்திரன் மகன் 
கவனித்தான் ஒன்று 
அஃது அவன் செய் நன்று... 

வனமகன் 
தொடுத்த கணை 
பெருவிரல் விட்டு விட்டு 
அதைக்கண்டு 
விஜயன் ஆவி 
நீங்கி மீண்டது 
உடல் விட்டு விட்டு... 

அவன் மனம் 
சொல்லியது ஈண்டு 
மனம்விட்டு போனது 
வெற்றி தந்த 
எரிச்சல் கழண்டு... 

விடுத்தான் 
வில்லை 
அழைத்தான் 
வனமகனை 
பெருவிரல் 
தொடாத பாணம் 
ஆயினும் தன் 
சரிநிகர் 
சமான பாணம்... 

வனமகன் இயம்பினான் 
பேருண்மை 
அவன் குருவின் 
விரல் வன்மை 
காண்டீபனை 
சுட்டது 
சொல்லொணாக் கொடுமை... 

ஏகலைவன் 
அர்ச்சுனன் 
கேட்டான் இறைஞ்சு 
வனமகன் குரு நாமம் 
சொன்னான் 
ஏகலைவனென்று... 

அற்றை நாளில் 
காணாது 
கணையெய்து 
வியப்பில் 
ஆழ்த்தியவன்! 
தன் குரு 
காணிக்கையாய் 
கட்டைவிரல் 
தந்து தனை 
அச்சத்தில் 
ஆழ்த்தியவன் !
அதனால் தனை 
உச்சத்தில் 
ஏத்தியவன்! 
இருக்கிறான் 
குருவாக 
உதிரவில்லை 
பருவத்து மருவாக... 

உன்மத்தம் 
உச்சந்தலையில் ஏற 
வேண்டினான் 
அவனை. 
தனை 
அழைத்துச்செல்ல 
அவன் குருவிடம் 
அவர்தம் அமைவிடம்...

கட்டைவிரல் 
தந்து 
நெட்டை புகழ் 
பெற்றவனை 
ஆண்டு  பல 
கண்டு 
அளவிலா 
இன்பம் கொண்டு 
அர்ச்சுனன் 
புகழ்ந்தான் 
ஏகலைவனை...

வாழ்த்தினான் 
வனமகனை  - தன் 
மனம் தனை 
மாற்றியவனை
அல்லிலும் 
அம்பெய்யும் 
அற்புதம் 
அவன்குருவின் கண் 
தான் பெற்ற 
தத்துவத்தை 
தாத்பர்யத்தை 
உத்வேகத்தை 
என போற்றினான் 
அவன் மகத்துவத்தை... 

ஏகலைவன் 
கண்ட மாத்திரம் 
புரிந்தான் 
வந்தவன் 
தன் 
மானசீக குருவின் 
மாணாக்கனென்று... 

அர்ச்சுனன் 
இயம்பினான் 
கட்டை விரலின்றி 
கணை செலுத்தும் 
கலை 
அட்டியின்றி 
அவன் வன்மைக்கு 
 சமநிலை... 

அழிந்தது 
தன் வெற்றி எரிச்சல், 
இறுமாப்பு... 
தனை வெல்ல 
சகத்தினில் உண்டு 
ஒரு மாப்பு... 

ஏகலைவன் 
சொன்னான் 
நின் குரு  நிறை 
அவர் நடமாடும் இறை... 

என் வில் 
கொள் கணை 
செல்லும் 
பத்துப்பனை -ஆயின் 
உன் அம்பு கொளும்  
கை தொழும் 
தெய்வந்தனை. 
அஃது வராது என் 
அம்பு முனை 
ஆகையால் 
நீ தான் வில்லின் இறை 
இது என் மேல் ஆணை... 

இறைஞ்சி 
கூப்பிட்டும் 
தன்னோடு 
வராத 
மித்திரனை 
விசித்திரனை 
வாழ்த்திவிட்டு 
புறப்பட்டான் 
விஜயன் 
தன் அகம் நோக்கி, 
தன் அகம் பல 
நல்ல நிகழ்வுகளை தேக்கி...

Saturday, March 21, 2020

காலம் (QALAM)

ஆண்டு : 2050

ஒரு அலுவலக காலை நேரம்.  Dr. நாணன் ஒரு முக்கியமான அரசாங்க நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்தார். அதற்கு தேவையான கோப்புகளையும் தகவல்களையும் கவனமாக தனது ப்ரீப் கேசில் வைத்து தன் வீட்டிலிருந்து புறப்பட்டார். தனது அலுவலகத்திலிருந்து குறித்த நேரத்திற்கு ஹெலி கார் வரவும் அதிலேறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.


விழா ஆரம்பித்து வழக்கமான அரசு நிகழ்வுகளுக்கு பிறகு, Dr. நாணன் மேடையேறி அந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

"அனைவருக்கும் வணக்கம். இந்த அறிவிப்பை நான் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  QALAM (Quantum computer Applied Long term Aspirational Medication) என்ற புத்தம் புதிய அமைப்பை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறேன். இந்த அமைப்பு குவாண்டம் கம்ப்யூட்டர்(Quantum Computer), ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), நானோபாட்(Nanobot) ஆகியவற்றின் கலவை. இதை காலம் என்று அழைக்கலாம். இந்த அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் இதன் பயன்கள் என்னென்ன என்று விரிவாக எடுத்துரைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கடைசியில் உள்ள கேள்வி பதில் நேரம் பகுதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முதலில் இந்த நானோபாட்கள் காற்றில் ஒரு கன அங்குலத்திற்கு  (cubic inch), 3 கோடி நானோபாட்கள் என்ற விகிதத்தில் கலக்கபடும். இவை இந்த உலகம் முழுவதும் பயணித்து அனைத்து இடங்களிலும் இருக்கும். ஏதேனும் நோய் கிருமிகள் எங்கேனும் தாக்க ஆரம்பித்தால், இவை உடனடியாக அதன் தகவல்களை சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டருக்கு(Quantum Computer) அனுப்பி வைக்கும். இது சாட்டலைட்(Satellite)  இணைப்பு இல்லாத இடங்களிலும் மெஷ் நெட்வொர்க் (mesh network) அடிப்படையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும். இந்த நானோபாட்கள் ஏற்கனவே உள்ள தொலை தொடர்பு அலைக்கற்றையில் உள்ள white space எனப்படும் பயன்படுத்தபடாத அலைவீச்சை பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த நோய் கிருமிகளின் தரவுகளை வைத்து சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டர், அதற்கான மருந்தை சில மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடும். இதை கண்டுபிடிக்க, பலருக்கு பரிட்சயமான PARAM Brahma மற்றும்  IBM Summit போன்ற சில சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு சில/பல ஆண்டுகளாகும்.

இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து இதற்கான நிதியை தந்து உதவிய அரசுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்." என்று முடித்தார். கரவொலி அடங்க சிறிது நேரம் ஆனது.

அடுத்து வந்த அரசியல்வாதிகள் தாங்கள் எப்பொழுதும் மக்கள் நலன் சார்ந்தே சிந்திப்போம் என்று எப்பொழுதும் சொல்லும் பொய்யை வேறு வேறு வடிவங்களில் சொல்லிவிட்டு சென்றனர்.

கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் மேடையேறினார் Dr. நாணன்.

நிருபர் 1: இந்த சுப்ரீம் கம்ப்யூட்டரின் பவர் பற்றி சொல்லுங்கள் டாக்டர்.

Dr. நாணன் : தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவிலை மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டும்பொழுது, அதன் பிரமாண்டத்தை காட்ட முதலில் ஒரு சிற்பம் செய்ய சொல்லி அதை கோவிலின் வாசலில் வைத்து இருப்பார். அச்சிற்பத்தில் யானையை விழுங்கும் பாம்பை தன் காலடியில் வைத்து இருப்பது போல ஒரு வீரனை செதுக்கி இருப்பார்கள். அதாவது யானை எவ்வளவு பெரியது, அதை விழுங்கும் பாம்பு எத்துணை பெரியதாக இருக்க வேண்டும். அதை தன் காலடியில் வைத்து இருக்கும் வீரன் எவ்வளவு பெரிய ஆகிருதியாக இருக்க வேண்டும். அது போல இந்த சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டால் மிகச் சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் மைக்ரோ கண்ட்ரோலர்களான Arduino, NodeMCU  அளவே அதன் பவர் இருக்கும்.

நிருபர் 2: உலகில் அனைத்து இடங்களிலும் உங்களின் நானோபாட் இருக்கும் என்று சொன்னீர்கள். இது எங்களின் பிரைவசியில் தலையிடாது என்பதற்கு என்ன ஆதாரம் ?

Dr. நாணன் : இது ஒரு நல்ல கேள்வி. நானோபாட்கள் உயிர்வேதி(biochemical) தரவுகளை மட்டும் தான் சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டருக்கு அனுப்பும். அதை வைத்து எங்களால் உங்கள் பெயரையோ, உங்கள் அரசாங்க எண்ணையோ கண்டறிய முடியாது.

நிருபர் 3: இந்த சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டரில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளதா?

Dr. நாணன் : சாதாரண சூப்பர் கம்ப்யூட்டரில் பிழை ஏற்பட நிகழ்தகவு (probability) 0.0000001. ஆனால் இந்த சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டரில் அதற்கான வாய்ப்பு 0.0000000000001. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்

நிருபர் 4: இந்த சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டருக்கு என்ன மாதிரியான குளிர்விக்கும் முறை (cooling method) பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

Dr. நாணன், கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மேஜரா? என்று புன்னகையோடு அந்த நிருபரை கேட்டுவிட்டு,
"இதற்கான குளிர்விக்கும் முறை (cooling method), புதுவிதமானது. இதுவரை எல்லாரும் நீர்ம நைட்ரஜன்(Liquid Nitrogen) பயன்படுத்துவர். ஆனால் நாங்கள் அதனோடு காலியம் (Gallium) சேர்த்து செய்து இருக்கிறோம். இதனால் -1000 கெல்வின் என்ற வெப்பநிலையை சர்வ சாதாரணமாக அடையமுடிந்தது. அந்த வெப்பநிலை குவாண்டம் கம்ப்யூட்டர் பிழை இல்லாமல் வேலை செய்ய உதவும்."

இவ்வாறு பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்துவிட்டு மேடையை விட்டு கீழிறங்கினார்.


அடுத்த நாள், தன்னுடைய அலுவலக அறையில் QALAM டாஷ்போர்டை பார்த்துக் கொண்டு இருந்தவர். தன் உதவியாளர் பாரி வரவும், முன்தினம் விழாவில் நடந்தவற்றை சொல்லினர். பாரியும் இதன் உண்மையான நோக்கம் இதுவரை யாருக்கும் தெரியாது இல்லையா என்று கேட்க, "இல்லை" என்றவர், "மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த அரசாங்கம் தான் தயாராக இருக்கும். அதில் தனக்கு என்ன பலன் என்றே பார்க்கும். அதனால் தான் இந்த திட்டத்தை அரசிடம் விளக்கும்போது அதை முதலில் சொன்னேன். அதாவது, யாரேனும் அரசுக்கு எதிராக சிந்தித்து செயல்பட தொடங்கினால், இங்கிருந்தே நானோபாட் உதவியோடு, அந்த மனிதரின் கதையை முடித்துவிடலாம் என்று சொன்னதும், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு உடனடியாக நடந்தது."

பாரி சென்ற பிறகு, QALAM டாஷ்போர்டை பார்த்து அதிசயித்து நின்றார். ஏனெனில், நானோபாட் தகவல்கள் வரத்தொடங்கி, உலகில் உள்ள எல்லா உயிரினத்தின் Genome தரவுகளும் சுப்ரீம் குவாண்டம் கம்ப்யூட்டரில் சேகரமாகி விட்டன. இந்த Genome code தரவு என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரியல் ஜாதகம்.  அதாவது அவனின் உருவ அமைப்பு தொடங்கி, அவன் ஒரு விஷயத்திற்கு எவ்வாறு react செய்வான் என்று எல்லாம் சொல்லிவிடும். அந்த Genome code ஒவ்வொரு உயிருக்கும் தனித்தன்மையோடு(unique) இருந்தது. அது தான் அவரது ஆச்சரியத்திற்கு காரணம். அது மட்டுமல்லாமல் ஒரு உயிர் இறந்த பிறகே அதே Genome code தரவோடு வேறொரு புதிய உயிர் பிறந்தது.

அவர் உடனே, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸின் டீப் லேர்னிங்க் (Deep learning) முறைமையில் அடுத்து பிறக்கும் உயிரின் Genome Code தெரிந்து அதிர்ந்தார். ஏனெனில் அது அவருடைய Genome Code. அப்படியென்றால் அவர் இறக்கபோகிறார்.

பெரும் வெடி சத்தத்துடன் அந்த கட்டடம் இடிந்து நொறுங்கியதில் Dr.நாணன் இறந்து போனார். நீர்ம நைட்ரஜன்(Liquid Nitrogen), காலியம் (Gallium)  கலவையில் ஏற்பட்ட சிறு பிழை அந்த முழு திட்டத்தையும் மண்ணோடு மண்ணாக்கியது.

QALAM இருந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் காலம், தன் ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று கண் சிமிட்டியது.

References:
https://en.wikipedia.org/wiki/Quantum_computing
https://en.wikipedia.org/wiki/White_spaces_(radio)
https://en.wikipedia.org/wiki/PARAM
https://en.wikipedia.org/wiki/Summit_(supercomputer)
https://en.wikipedia.org/wiki/Arduino
https://en.wikipedia.org/wiki/NodeMCU
https://en.wikipedia.org/wiki/Liquid_nitrogen
https://en.wikipedia.org/wiki/Gallium
https://en.wikipedia.org/wiki/Genome
https://en.wikipedia.org/wiki/Artificial_intelligence
Thanjavur Sculpture explanation video - https://www.youtube.com/watch?v=ipCO5jXjzSU

Monday, February 10, 2020

வேள்பாரி

வேளிர்கோ  பாரி
வேளிர்க்கோ பாரி ?
இல்லை ..
வேலனுக்கும் பாரி
நீலனுக்கும் பாரி
வேழத்திற்கும் பாரி 
சோளத்திற்கும் பாரி

கானத்திற்கும் பாரி
கானகத்திற்கும் பாரி
காவலுக்கும் பாரி

தோள்வலிவுக்கும் பாரி - எதிரியின்
தோள்வலிக்கும் பாரி - கொடை
அளிக்கும் பாரி
வளிக்கும் பாரி 
வேளைக்கும் பாரி

நீருக்கும் பாரி
வேருக்கும் பாரி  - சூழ்ச்சியை
வேரறுக்கும் பாரி
வானருக்கும் பாரி
பாணருக்கும் பாரி

கொடிக்கும் பாரி
செடிக்கும் பாரி - அறுபதாங்
கோழிக்கும் பாரி
பாலிக்கும் பாரி

நெல்லுக்கும் பாரி
சொல்லுக்கும் பாரி

அறத்திற்கும் பாரி
மறத்திருக்கும் பாரி
மரத்திற்கும் பாரி
மடுவுக்கும் பாரி

காலத்திற்கும் பாரி
காலம்பனுக்கும் பாரி
கபிலருக்கும் பாரி
ஆதினிக்கும் பாரி

தேக்கனுக்கும்  பாரி
தெவிட்டாதவன் பாரி
அலவனுக்கும் பாரி
அனைவருக்கும் பாரி..

என் ஓவியங்கள்

Sunday, February 9, 2020

கவனிதை

ஆதவன் தன் அகங்காரத்தை குறைத்துக்கொண்டு அன்போடு ஆரஞ்சு பூக் கூடையை வானெங்கும் விசிறி இருந்த அந்தி நேரம். அந்த பெண்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்காக களை கட்டியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ட்யூப் லைட்கள் கட்டப்பட்டு இருந்தன. மைதானத்தின் நடுவில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சரியான நேரத்திற்கு கல்லூரி முதல்வர் விழாவினை தொடக்கி வைத்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மாணவர்களின் கமெண்ட்டும் கைதட்டலும் அரங்கை அதிர செய்து கொண்டு இருந்தன. கல்லூரி முதல்வர், பல பிரிவுகளில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கொண்டு இருந்தார். அடுத்த பிரிவு  "கவனிதை" என்று சொன்னதும், மாணவர்கள் அனைவரும் அமைதியாகி அந்த விருதின் முக்கியத்துவத்தை காட்டினர்.

"விழிப்புணர்வு, கவன ஒருங்கிணைப்பு  என்பது எப்பொழுதும் அனைவருக்கும் மிகவும் முக்கியம். ஷெர்லாக் ஹோல்ம்ஸோ, சூஃபி ஞானியோ, சாதாரண மனிதர் எவராயினும் கவனக்குவிதல் என்பது அனைவரும் கைக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதனடிப்படையில் நம் கல்லூரி இந்த விருதினை வழங்குகிறது. இந்த விருதிற்கு தகுதியான பல மாணவிகள் போட்டியிட்டாலும், முதல் பரிசை வென்ற மாணவியின் கவனக்குவிதல் மற்றவரை விட தனித்துவமானது.  கடந்த ஒரு வாரத்தில் ஒரு ஆசிரியை அணிந்து வந்த தோடில் இருந்த கற்களின் எண்ணிக்கை  பிபோனிச்சி (fibonnici) தொடரின் அடிப்படையில், அதாவது 1, 1, 2, 3, 5, 8, 13 என்ற வரிசையில்  இருந்ததை சரியாக கவனித்து முதல் பரிசை வெல்கிறார். அவர் 'கபிலவாணி'" என்று முதல்வர் சொன்னதும், அனைவரின் கரவொலி விண்ணை பிளந்தது. கபிலவாணி பரிசை வாங்க மேடையேற, அவள் செல்போன் அழைத்தது. திரையில் "நீலேஷ்" என்று ஒளிர்ந்திட அழைப்பை துண்டித்து விட்டு அனைவரின் கரகோஷங்களுக்கிடையில் பரிசை வாங்கினாள்.

மறுநாள்,  கபிலவாணி தன் கசின் நீலேஷுக்கு போன் செய்து "என்னடா நேத்து போன் பண்ணுன ??" என்று கேட்டாள்.  அவன் "என்னோட கூட படிக்கிற பொண்ணு , ரெம்ப பிரண்ட்லியா பழகுறா.. ஆனா லவ் பண்றாளான்னு தெரியல. ஒரு நல்ல நட்பை இழந்துடுவோமோன்னு ப்ரொபோஸ் பண்ணவும் பயமா இருக்கு. நீ தான் பெரிய கவனிதை ஆச்சே.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா" என்றான்.

ஒரு நாள் நீலேஷ் கல்லூரிக்கு கபிலவாணி சென்றாள். நீலேஷ் அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான். அவள் "பீலி.. மயிற்பீலி" என் பெயர் என்றாள். அவளை ஆச்சரியமாக பார்க்க, தன் தந்தை தமிழ் ப்ரொபஸர் என்று தன் பெயருக்கு விளக்கம் அளித்தாள். மூன்று பேரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தில் இருந்து வாசல் வரை நடந்து வந்தனர். வழியில் பல மேன்ஹோல்களின் இரும்பு மூடியின் மீது நடக்க அது "தட்.. தடக்" என ஒலி எழுப்பியது. சாலையை அடைந்தவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பீலி அவர்களிடம் விடை பெற்று சென்றாள்.

அவள் போன பிறகு கபிலவாணி "கைய குடுடா" என்று மகிழ்ச்சியில் கைகுலுக்கினாள். அவன் ஒன்றும் புரியாமல் முழிக்கவே, "நீ அவளிடம் தாராளமாக ப்ரபோஸ் பண்ணலாம்" என்றாள். அவன் திகைத்து நிற்க, "அவள் உன்னை விரும்புவதாக ஏற்கனவே சொல்லிவிட்டாள்" என்றாள். "எப்போ? எப்படி?" என்றான் ஆச்சரியம் விலகாமல். "பீலி, மேன்ஹோல் மூடியில் நடக்கும்போது வரும் சத்தத்தில், மோர்ஸ் கோடில், அதாவது தந்தி குறியீட்டில் அதைச் சொன்னாள்" என்று  சொல்லி தான் "கவனிதை" என்பதை மற்றொரு முறை நிரூபித்தாள்..

.. / .-.. --- ...- . / -. . . .-.. . ... ....