Wednesday, May 9, 2018

வளர் சிதை மாற்றம்


சிங்கார மாநகரத்தை ஒட்டிய வளர்ந்துவரும் குடிருப்புப் பகுதி. இரவு நடுநிசி தாண்டியதை தெருவில் சுற்றித் திரியும் நாய்களின் குலைப்பு சத்தம் உறுதிப்படுத்தியது.  மெயின் ரோட்டிலிருந்து பிரியும் கார் நுழைய முடியாத சந்தின் ஆரம்பத்தில் ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து ஒரு இளைஞன் பாதி தூக்கத்தோடு ட்ரிப் ஷீட்டில் சைன் செய்துவிட்டு, தன் தலைவிதியை நொந்தபடி சந்திற்குள் நுழைந்தான். காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வாக்குறுதிகளாய் தெரு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் எரிந்தன. ஐ.டி எனும் மாய விளக்கில் விழுந்த விட்டிலில் அவனும் ஒருவன். குலைப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து பரீட்சயமாய் வாலாட்ட, தான் பார்க்கும் வேலைக்கு இவை தான் தனக்கு நண்பனாய் இருக்க முடியுமென்ற விரக்தியை புன்னகையாய் மொழி பெயர்த்துவிட்டு தன் வீடு இருக்கும் திசை நோக்கி நடந்தான். தனக்குப் பின்னே பறவையின் சிறகடிக்கும் சத்தம் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு தொடர்ந்தான். இருந்தாலும், அந்த சத்தம் பின்தொடர்வது தெரிந்ததும் பயப்பந்து தொண்டையை அடைக்க, சற்று நின்று மெதுவாக பின்பக்கம் திரும்பி பார்த்தான். அந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் போகவே, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பி நடந்தான். "கிறீச்" எனும் சத்தத்தோடு ஏதோ பறவை நகத்தால் பின்கழுத்தில் பிறாண்டியது போல எரிய, சத்தம் போட்டு மற்றவரை அழைக்குமுன்னே மயங்கி சரிந்தான்.


காலை 9 மணி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மிடுக்காய் முறுக்கிய மீசையோடு முப்பதுகளின் பின்பாதியில் இருந்தார். மேசை மேலிருந்த டெலிபோன் அழுகையை நிறுத்த ரிசீவரை காதுக்கு கொடுத்தார். விஷயத்தையும் விலாசத்தையும் கேட்டுக்கொண்டு அரை மணியில் ஸ்பாட்டில் இருந்தார் . அழுதழுது வீங்கிய கண்களோடு இருந்த இறந்த இளைஞனின் பெற்றோரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துகொண்டு, போஸ்ட்மார்ட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இறந்த இளைஞனைப் பற்றி அந்த ஏரியா முழுதும் விசாரித்தார். எந்த தகவலும் உருப்படியாக இல்லாததால், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்க்கு காத்திருந்தார்.

அன்று மாலை ரிப்போர்ட் வந்ததும் படித்துவிட்டு, யோசனையாய் முகவாயை சொரிந்து கொண்டார். ரிப்போர்ட் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை சொல்லிற்று

  • பின் கழுத்தில் நகக் கீறல் போன்ற கோடுகள் 
  • பாம்பின் கடி வாய் போல 2 புள்ளிகள் ஆனால் இரத்தத்தில் துளி விஷம் இல்லை
  •  ஆனால் இயற்கையாக இறந்தவரின் உடம்பில் இருப்பதை விட 1 லிட்டர் இரத்தம் குறைவு
  •  இது கிரிட்டிகல் ஹியூமன் பாடி பிளட் குவான்டிட்டியை விட குறைவு
  •  இதனால் செரிப்ரல் ஸ்ட்ரோக் வந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்

இந்த கேஸ் நம்மை ரெம்ப சுத்தல்ல விட்டுடும் போலயே என யோசனையாய் தாடையை சொரிந்தபடி யோசனையில் ஆழ்ந்தார்.

இதே பாட்டர்னில் 6 மாதத்திற்குள் 4, 5 கொலைகள், முதல் கொலை நடந்த வட்டாரத்தில் நடந்து விட ஒரு துப்பு கூட கிடைக்காமல் இன்ஸ்பெக்டர் விரக்தியில் இருந்தார். டிபார்ட்மென்ட் மேலதிகாரிகள் வேறு அவரை கூப்பிட்டு டோஸ் விட்டனர். மீடியாக்களுக்கு வேறு அவல் கிடைக்காததால் இந்த செய்தியை ஹாட் நியூஸாக போட்டி போட்டுக்கொண்டு ஒளி பரப்பினர்.

இந்நிலையில் ஒரு நாள் டிவியில் விவசாய நிகழ்ச்சியில் ஒருவரை பேட்டி கண்டனர். அதில் அவர் வீட்டு ரோஜா அளவில் பெரியதாகவும் இரத்த சிவப்பு நிறத்திலும் இருப்பதாகவும், அவர் வீட்டு ரோஜா அந்த ஏரியாவில் பிரபலம் என சொல்ல, அதை பார்த்த இன்ஸ்பெக்டர் மூளையில் பிளாஷ் அடிக்க, அவர் வீட்டு அட்ரஸை டிவி ஸ்டேஷனில் வாங்கி கொண்டு அடுத்த அரை மணி நேரத்தில் அவர் முன்னால் இருந்தார். அவர் வீடு கொலைகள் நடந்த ஏரியாவிற்கு அடுத்து இருந்த ஏரியாவில் இருந்தது.

அவர் வீட்டு ரோஜா அளவில் பெரியதாகவும் இரத்த சிவப்பு நிறத்திலும் அவர் டிவியில் சொன்னது போலவே இருந்தது. அதன் காரணத்தை கேட்டபோது அவருக்கு தூக்கிவாரி போட்டது. ஏதோ பேப்பர் கட்டிங்கில் வைட்டமின் மாத்திரையை ரோஜா செடி அருகில் புதைத்து வைத்தால் ரோஜா நன்றாக பூக்கும் என படித்ததை செய்து பார்த்ததை சொன்னார். அதோடு கடந்த ஒரு வருடமாக தன் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய வைட்டமின் & ப்ரோடீன் மாத்திரைகளையும் மாதம் இருமுறை ரோஜா செடிக்கு போடுவதாகவும் சொன்னார்.

உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை செய்தார். பாரஸ்ட் டிபாட்மென்டுக்கு சொல்லி விட்டார். அவர் வீட்டை சுற்றி Infrared கேமராக்களை செட் செய்தார். இரவு 10 மணி இன்ஸ்பெக்டர் மற்றும் அனைவரும் தயாராக இருந்தனர். நடுநிசி ஆனபிறகு பறவை சிறகடிக்கும் சத்தம் கேட்க அனைவரும் அலெர்ட் ஆயினர். சற்று நேரத்தில் ஒரு பெரிய பருந்து போல ஒரு பறவை பறந்து வந்து அந்த ரோஜா பூ மேல் அமர்ந்தது.

Infrared கேமராவில் பார்க்கும்பொழுது தான் தெரிந்தது அது ஒரு வண்ணத்துப்பூச்சி என்று. அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆபிசர் மயக்க ஊசி துப்பாக்கி மூலம் அதை மயக்கமுற செய்தார்.

அடுத்த நாள் காலை இன்ஸ்பெக்டர் ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தார். ரோஜா செடிக்கு போட்ட வைட்டமின் & புரோட்டீன் மாத்திரைகள் காலாவதியானதால் அது ரோஜா செடியின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து அதுமேல் அமரும் வண்ணத்துப்பூச்சியின் ஜீனை மாற்றிவிட்டது. அதனால் வண்ணத்துப்பூச்சி நெக்டருக்கு பதிலாக இரத்தத்தை குடிக்க ஆரம்பித்து விட்டது.