சிலம்பெணும் ஞெகிழி - கால்
கிரண்டைக்குக் கீழே! இது நியதி
பிரண்டது நியதி - அது
பிறங்கியது கடை வீதி
பிறழ்ந்தது மன்னன் மதி
மாறியது கோவலன் விதி!
மாதவி விடுத்து
மாதுவோடு
மதுரை ஏகினான்
மன்னன் அனைய கோவலன்..
கட்டியவளின் நகையோடு
கடைத்தெருவிற்குச் சென்றான் விற்க
அங்கே அவனது ஊழ்
கூழாய் உருகி காத்திருந்தது
அவனது மென்னியை மென்ன..
கோவலனின் கை நகை
கோநல்லாள் கால் நகை என
காவலரெலாம் கவள
கோவலன் மருள
கோமன்றம் சென்றனர்.
வழக்கு, மன
இழுக்கு தரும் ஐயம்
இவற்றின் கண்
ஆராய்தல் தலை - ஆனால்
ஆராயவில்லை
அத்தல தலை..
வழங்கினான் தீர்ப்பு - அது
வஞ்சக அநீதியின் வார்ப்பு
வலனுக்குத் தூக்கு என ஆணையிட்டான் எள்ளி
தன்குல கீர்த்திக்கு தானேயிட்டான் கொள்ளி.
நீர் வழி செல்லும் கட்டுமரம்போல - கோவலன்
ஊழ் வழி சென்று வீழ்ந்தான் சுட்டமரம்போல.
மணாளன் இறந்த சேதி கேட்டு
மடந்தை அழுதாள், அரற்றினாள்
காரணமறிந்து எழுந்தாள் வெகுண்டு - அவள்
கண்கள் இரண்டும் சிறு தீத் துண்டு.
காவலன் மன்றம் சென்றாள்
பல தடைகளைத் தாண்டி
கோவலனுக்கும் தனக்கும்
நீதி வேண்டி..
மன்னன் முனம் சொன்னால் தன் மனை சிறப்பு - தன்
மன்னன் பிறந்த மனை சிறப்பு - இங்ஙனம் இருக்கையில்
என்னவன் தென்னவன் சேர- நின் தீர்ப்பு
எள்அளவும் இல்லை உண்மை..
மன்னன் உரைத்தான்
பெண்ணே! சற்று அமர்
நின் குல பெருமை என்றனுக்குச் சமர் - போதிலும்
உன் அத்தான் - பெரிய எத்தன்
ராணியின் நகையைத்
தன் நகை என்ற பித்தன்.
வெகுண்டெழுந்த மாட்டி
தன் சிலம்பை எறிந்தாள் கை நீட்டி சிதறிய சிலம்பு
மாணிக்கப் பரல்களைக் கொட்டியது
கோமகள் தன் சிலம்பு திறக்க
கொட்டியது முத்து -
அது மன்னனின் மனதிலே
மொத்தியது ஒரு மொத்து.
மன்னன் எழுந்தான் கூனிக்குறுகி
தான் என் செய்வோம் என மறுகி
மந்திரிகளைச் சாடினான் கடுகி
பின் நொந்தான்
தனை நிந்தித்து - ஏது பயன் பிறரை சாடிஎனச் சிந்தித்து.
குற்றமில்லா கோவலனை
கூற்றுக்குக் கொடுத்த
கொற்றவன் கூறினான் தட்டுத்தடுமாறி
"கோவலன் அல்லன் கள்வன். யானே கள்வன்".
ஆராயாமல் செய்த பிழைக்கு நானே பொறுப்பு
அதனால் என்மேல் ஏகப்பட்ட வெறுப்பு
என்நிலை தாழ்ந்த பிறகு எதற்கு இந்த இருப்பு
என் உயிர் பிரியட்டும் உடனே, எவர் கூறுவார் மறுப்பு.
வீழ்ந்தது மன்னன் உடல் உயிரின்றி
கீழ்ந்தது அவன் கொற்றக்குடை தாளின்றி
பார்த்தனள் வேந்தன் மனை
மாய்த்தனள் தன் உயிரை மனம் வெந்து.
அடங்கியது ஈர் உயிர்
மடங்கவில்லை மாதராசியின் கனல்
அவள் மனஅனலை
அடக்க
அவணியில் இல்லை புனல்.
பிடுங்கி எறிந்தாள் தன் இட கொங்கை
பித்துப் பிடித்தவள் போலிருந்த மடந்தை
பற்றியது நெருப்பு - அவள்
கற்பின் வெற்பு - அதுவே அதன் பொறுப்பு.
தேயு தோய தோய கானகம் கனன்றது
வாயு கனலை பரப்பியது
காய்ந்த மரமும் எரிந்தது - கூரை
வேய்ந்த குடிசையும் எரிந்தது
வெந்து தணிந்தது நாடு நகர்
அவள் மனம் சொன்னது
அவ்விடத்தை விட்டு நகர்.
அமைதி வேண்டி சென்றாள்
மற்றொரு கானகம் - அவள்
மன்னன் ஏகிய வானகம் (நோக்கி).
ஆங்கோர் அடவி
அதிலொரு அருவி
காடெலாம் பசும்புல் பரவி
ஆங்காங்கே மேய்ந்தன சில புரவி.
வானிலிருந்து இறங்கியது ஒரு தேர்
வேழக்கொம்பின் நிறத்திற்கு நேர்
கந்தர்வர் அதை ஓட்டி வர - தன்
கண்ணாளனைக் கூட்டி வர - அதைக் கண்ட
கண்ணகிக்கு வரவில்லை வார்த்தை
கண்ணில் நீராக வந்தது வாழ்க்கை.
கட்டிக்கொண்டாள் அவனை ஓடி
கந்தர்வர் வாசித்தனர் தோடி
கணவனோடு அவள் சென்றாள் சுவர்க்கம்
இதனை வாசித்த அனைவருக்கும் வணக்கம் ...