எனது மகள் நெய்லா, தன் காதலை சொன்னவுடன் எல்லா அப்பாக்களை போலவே நானும் கோபப்பட்டேன். என் மனைவியும் "ஏங்க.. ஊர் உலகத்தில நடக்காததா இது" என்று என் மகளுக்கு சப்போர்ட் செய்தாள். "ஏம்மா .. நீ படிச்ச படிப்புக்கு இங்க தான் வேலை கிடைக்கும்னு சொன்னதால, நம்ம மண்ணு, மக்கள விட்டுட்டு இங்க வந்ததுக்கு நீ குடுக்கும் பரிசா இது" என கேட்டேன். "இல்லப்பா அவர் ரொம்ப நல்லவருப்பா.. என்ன கண்கலங்காம பாத்துக்குவாருப்பா .." என அழுது கொண்டே சொன்னாலும் தன் நிலையில் அணுவளவும் நகராமல் இருந்தாள். சரி, எந்த அப்பாவுக்கு தான் தன் மகள் அழுவது பிடிக்கும். "அவர் நம்ம ஆளுங்களா??" என கேட்டேன். என் மனைவி "ஏங்க.. எந்த காலத்தில இருக்கீங்க??" என்று கோபப்பட்டாள்.. "சரி, அம்மாவும் பொண்ணும் முடிவு செஞ்சப்புறம் நான் அத மாத்தவா முடியும்" என்றேன்.
"அது மட்டும் இல்லப்பா.. உங்களுக்கு சந்தேகமா இருந்தா அவர் மெடிக்கல் டெஸ்டுக்கும் சம்மதம் சொல்லிட்டார்" என்றாள் என் மகள். "அப்பறம் என்னங்க... இந்த காலத்துல இப்பிடி யாரு சொல்லுவா சொல்லுங்க" என்றால் என் மனைவி . "அது மட்டும் இல்ல, ஒரு நல்ல பிரைவேட் டிடெக்ட்டிவ் வச்சு அவரோட நடத்தையையும் செக் பண்ணிரலாம்" என்று யோசனை சொன்னாள்.
சில வாரங்களில் மெடிக்கல் டெஸ்ட் அண்ட் டிடெக்ட்டிவ் ரிப்போர்ட் வந்தது. இரண்டிலும் பையன் நல்லவன் என்று வர நானும் வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டேன். ஒரு நல்ல நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஒரு மாதத்தில் திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.
திருமண நாளன்று மணமகன் அவர்கள் வழக்கப்படி உடை உடுத்தி திருமணம் நடந்தது. அப்பொழுது தான் அவரை நன்றாக பார்க்க முடிந்தது. பக்கத்திற்கு மூன்றாக மொத்தம் ஆறு கண்கள், இருபுறமும் சிறிய கொம்புகள், ஒரு அடி நீள வால்.. ஆம்... என் மகள் விரும்பியது ஒரு ஏலியனை.. நாங்கள் இருப்பது ஆன்ரோமேடா காலக்ஸியின் ஒரு சிறு கோளில். என் மகள் படித்த படிப்புக்கு இங்க தான் வேலை எளிதாக கிடைக்கும் என்று பூமியை விட்டு வந்து ஐந்து ஆண்டுகள் (பூமி கணக்கில்) ஆகிறது. நான் "நம்ம ஆளுங்களா" எனக் கேட்டது மனித இனமா என்று நான் சொல்லி வாசகர்களுக்கு தெரிய தேவையில்லை...
--சத்யா
ஆசிரியர் குறிப்பு :
இக்கதையை ரெம்ப நாட்களுக்கு முன்பேயோசித்து விட்டாலும் சரியான தலைப்பு கிடைக்காமல்(நேரமும் தான்) எழுதாமலே இருந்தேன். திடீரென ஒருநாள் இந்த யோசனை வந்தது. (Alien பின்னால் போனால்/ள் neilA). அதையே தலைப்பாக வைத்து விட்டேன்.