யானையின் ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்துக்காரர்கள், அவற்றின் நிலை அறிந்து அது மதம் கொல்லப் போவதை முன்னரே அறிந்தனர். பல சந்ததிகளின் அறிவு சேர்மானம் மூலம் நால்வகை மதத்தையும், அதனை ஏற்படுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும் மூலிகைகளின் மூலம் வழி கண்டனர். ஒவ்வொரு வகை மதத்தின் ஆற்றலைக்கொண்டு அவற்றை சரள மதம், குட்ட மதம், உள் மதம் மற்றும் எரி மதம் என வகைப்படுத்தினர். ஒரு சரள மத யானையின் பிளிறல் பத்து மதம் கொள்ளா யானையின் பிளிறலுக்கு இணையாகாது. ஒரு குட்ட மத யானையின் பிளிறல் பத்து சரள மத யானையின் பிளிறலுக்கு இணையாகாது. ஒரு உள் மத யானையின் பிளிறலும் ஆற்றலும் பத்து குட்ட மத யானையின் பிளிறலுக்கு இணை சொல்ல முடியாது. உள் மத யானையின் பிளிறலைக் கேட்டால் மனிதனின் உள் இயக்கம் பாதிக்கப்பட்டு கால் பின்னி தரையில் வீழ்வான். எரி மத யானையின் பிளிறலுக்கு மதம் கொள்ளா யானையின் உள்ளியக்கம் தடைபட்டு கீழே விழும்.
சரள மதம் கொண்ட யானைகளை கொல்ல கருங்கைவாணன் ஆணையிட்ட போதும், அவற்றை நெருங்க முடியாதபடி இருந்தன. ஆயினும் ஒன்றிரண்டு மற்ற யானைகளால் குத்தப்பட்டு கொல்லப்பட்டன. கரந்தை செடி கொண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்ட யானைகளை, மூவேந்தர் படையை நோக்கி திருப்பி நிறுத்தி, அதன் குதத்தில் நீள்வட்ட மூங்கிலை செலுத்தி சில மூலிகை சேர்மானத்தை செலுத்தினர். இருப்பினும் அவற்றின் மூலிகை சேர்மானம் ஒன்று போல இருக்கக் கூடாது என்பது பறம்பின் யானைப்படை தளபதியின் கட்டளை. அவற்றில் சரிபாதி யானைகளுக்கு குட்ட மதமும், மற்றவற்றிற்கு உள் மதமும் ஏற்பட தேவையான சேர்மானம் கொடுக்கப்பட்டது. வாய்மூலம் கொடுக்கப்படும் மூலிகையை விட குதத்தின் வழியே கொடுக்கப்படும் மூலிகை விரைவில் வேலை செய்யத் தொடங்கியது. அரை நாழிகையில் எல்லா யானைகளும் பெருங்குரலெடுத்து பிளிறியபடி மூவேந்தர் படையை நோக்கி ஓடின. போகும்போது இருந்ததற்கும் அவை திரும்பி வரும்போது இருப்பதற்கும் ஏதோ வேறுபாடு என்று எண்ணிய மூவேந்தர் படையை துவம்சம் செய்ய ஆரம்பித்தன.
பறம்பு வீரர்கள் கரந்தைச் செடியைக் கொண்டு மதத்தை அடக்கியதை பார்த்த மூவேந்தர் தரப்பு, அவ்வாறே இப்பொழுதும் செய்யலாம் என முயன்ற ஒவ்வொருவனும் தும்பிக்கையால் வளைத்து தூக்கி எறிந்ததில் பத்துப் பனை தூரம் போய் விழுந்தான். அவன் சுதாரித்து எழும்முன் ஓடி வந்த யானை அவனை மிதித்து கொன்று விட்டு அவனை கடந்து சென்று கொண்டிருந்தது. முயன்றவர்களுக்கு தெரியவில்லை, கரந்தை செடி கொண்டு சரள மதத்தைத் தான் அடக்க முடியும் என்று.
சரள மதம் கண்ட யானையின் மேல் மனம் மட்டும் சற்றே பிசகி இருக்கும். ஆகையால் கரந்தை செடி கொண்டு அதனை சரி செய்ய முடியும். ஆனால் குட்ட மதம் கண்ட யானையின் மேல் மனம் முற்றிலும் பிசகி விடும். உள் மதம் கண்ட யானைகளுக்கு நடு மனமும் சேர்ந்து பிசகி விடும். எரி மதம் கண்ட யானைகளுக்கோ ஆழ் மனமும் சேர்ந்தே பிசகிவிடும். சரள மதமும் உள் மதமும் கண்ட யானைகள் அரை நாழிகையில் மூவேந்தரின் முதல் நிலைப் படையை உருத் தெரியாமல் அழித்துவிட்டு இரண்டாம் நிலை நோக்கி வீறு கொண்டு வந்து கொண்டிருந்தன.
யானைகளுக்கு மூலிகை சேர்மானம் குதத்தில் கொடுத்து கொண்டு இருக்கும்போதே சில கரு நிற சுரைக் குடுவைகள் இரலி மேட்டிலிருந்து வந்து சேர்ந்தன. இராவெரி மரத்தின் வேர்கள் தன்னியல்பில் கருமை நிறம் கொண்டிருக்கும். அவற்றை வெட்டி எடுத்து வந்து எரித்து கரியாக்கிவிடுவர். பின்பு அதனை பொடியாக்கி அதனுடன் கொடி நெல்லி சாறு கலந்து பிசின் போல செய்து சரியான அளவில் உள்ள சுரைக்குடுவையின் வெளியே பூசிவிடுவர். அது மெல்லிய தோல் போன்று இருக்கும். அதுனுள்ளே எந்த மணம் வீசும் பொருளை வைத்தாலும், அது வெளியே மணத்தை கசிய விடாது. ஒளியையே தனக்குள் கட்டி வைக்கும் மரத்தின் தன்மைக்கு முன்னால் மணத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அக்குடுவைக்குள்ளே காட்டெருமையின் சாணம் வைக்கப்பட்டு முற்றிலும் மூடப்படும். அக்குடுவையை வேகமாக தரையில் அடித்தால் உடைந்து உள்ளிருக்கும் சாணம் வெளி வந்துவிடும்.
மூவேந்தரின் இரண்டாம் நிலை நோக்கி வந்த யானைகளில் ஒன்றிரண்டு வந்த வழியே திரும்ப முயன்ற பொது இரவாதனும், உதிரனும் அந்த கருஞ்சுரை குடுவைகளை பத்தடி தொலைவில் இரு அம்பு கொண்டு விழசெய்து பின்பு அதை உடைத்தனர். காட்டெருமையின் சாணத்தின் நெடி மூக்கில் ஏறியதும் அவற்றின் ஆதி புலத்தில் இருந்த அச்சம் மேலெழுந்து வந்தது. அதனால் அவ்வாடை வந்த திசையின் எதிர் திசையில் அதாவது மூவேந்தர் படையை நோக்கி தறி கெட்டு ஓட செய்தது.
இரண்டாம் நிலையில் இருந்து கொண்டு கட்டளைகள் பிறப்பித்து கொண்டிருந்த கருங்கைவாணனின் தேரை ஒரு யானை முட்டி தூக்கி வீசியது. வீசும்முன் சுதாரித்து தரையில் குதித்து தன்னை காத்துக் கொண்டான் மகாசாமாந்தகனான அவன். அப்பொழுதே அவனுக்கு பாதி விளங்கி விட்டது. இந்நிலையில் குலசேகரனின் தளபதி முன் திட்டப்படி, இரு அம்பெய்தி திசைவேழரைக் கொன்று விட்டான். இதைக் கண்ட பறம்பு வீரர்கள் கூவல் குடி மூலம் பாரிக்கு தகவல் அனுப்பினர். அறத்திற்காக தன்னுயிரை ஈந்த அவரின் உடலை பறம்புக்கு கொண்டு வரச் சொல்லி தகவல் அனுப்பினான் பாரி. கூடவே கபிலரையும் கூட்டிவர சொல்லி விட்டான். பறம்பின் சிறந்த யானையின் மீது வைத்து திசைவேழரின் உடல் பச்சை மலை நோக்கி சென்றது. திசைவேழர் இறந்ததை கூவல் குடிகாரன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கபிலர். பாரியின் தகவலை சொன்னதும் ஒரு பறம்பு வீரனோடு பாரியின் இருப்பிடம் நோக்கி சென்றார் அவர்.
தன் தரப்பு கோள் சொல்லியையே கொல்லும் எண்ணமுள்ளவன் இன்னும் என்னவெல்லாம் செய்வான் என்று எண்ணிய பாரி, இந்த போர் ஏற்கனவே முடிந்து விட்டது. இனி நடப்பதெல்லாம் அழித்தொழிப்புதான் என்று எல்லா பறம்பு வீரனுக்கும் கூவல் குடிகாரன் மூலம் தகவல் சொல்லிவிட்டான். பறம்பு வீரர்கள் முறியன் ஆசான் கொடுத்த விஷமுறி மருந்தினால் விஷந்தோய்ந்த அம்பு, வேல், வாள் கொண்டு தாக்கினாலும் அவற்றால் பாதிக்கப்படாமல் வீறுகொண்டு மூர்க்கமாக போரிட்டுக் கொண்டிருந்தனர். சோழத் தளபதி ஒருவன் பறம்பு வீரர்களில் சிலர் மட்டும் அம்மருந்து கடலையை வாயில் போடவில்லை எனத் தெரிந்து, அதிலொருவனை தாக்கி அழிக்க விஷந்தோய்ந்த வாளோடு வந்தான். அவனுக்குத் தெரியாது விஷ மூலிகை நாவில் பட்டால் மூலிகைக்கே விஷமேற்றும் நாகர்குடிக்காரனை எதிர்க்கப் போகிறோம் என்று. அதிலும் அவன் தேர்ந்தெடுத்து தாக்க நினைத்தது உதிரனை. ஏற்கனவே தன் மனங்கவர் அங்கவையின் ஆசிரியரும், தன்னை மகனைப் போல நடத்தியவருமான கபிலரின் அழுகைக்குக் காரணமான ஒருவனையும் விடக்கூடாது என்று கண்ணில் பொறி பறக்க சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் வலிய வந்து சிக்கிய சோழத் தளபதியின் கை,கால்களை சோளத்தட்டையை உரிப்பது போல தன் ஈர்வாளால் வெட்டி உரித்துப் போட்டான் உதிரன்.