Sunday, April 6, 2025

வெள்ளப் பணியாரம்

எங்கள் செட்டிநாட்டுப் பகுதியில் வெள்ளப் பணியாரம் என்ற பலகாரம் மிக பிரபலம். அதை மட்டன் குழம்போடோ  அல்லது தக்காளி சட்னியோடோ சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.  வெள்ளப் பணியாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்பவர்கள் உணவு விஷயத்தில் பலநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளனர். "அது என்ன? உப்புமில்லாம.. உரப்புமில்லாம.." என்பவர்கள் எல்லாம் வேறொரு பரிமாணத்தில் உள்ளதாகவே நான் எண்ணுகிறேன்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு, சில சரவெடிகளை வெடித்துவிட்டு, இட்லியும், இந்த பணியாரமும் மட்டன் குழம்போடு சாப்பிட அப்பிடி இருக்கும்". எடப்பலகார வேளையின் போது(ஸ்னாக்ஸ் டைம்-க்கு இது தான் தமிழ் வார்த்தை) தக்காளி சட்னியோடு சாப்பிடுவது வேறொரு ருசியை நமக்குக் காட்டும்.

பார்ப்பதற்கு இட்லி போல இருந்தாலும், எம்.ஜி.ஆர் நடித்த "எங்க வீட்டு பிள்ளை" படத்தில் வரும் பணக்கார ராமுவும், ஏழை இளங்கோவும் போல தான். இந்த பணியாரம் ராமு போல கொஞ்சம் பணக்கார வஸ்து. ருசிக்கு சாப்பிடலாமேயொழிய பசிக்கு சாப்பிடமுடியாது. அதற்கு எளிமையான இளங்கோ போன்ற இட்லி தான் லாயக்கு. ( அந்த படத்தில் பணக்கார வெள்ளப் பணியாரம்,  சாரி... ராமு  ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிடுவார் என்பது வேறு விஷயம்).

இது பார்ப்பதற்கு இட்லி போல இருக்கே.. இட்லி மாவில் செய்ய முடியுமா என்று பார்த்தால், இல்லையாம்... இட்லிக்கு புழுங்கல் அரிசியும், இதற்கு பச்சரிசியும் தான் வேண்டுமாம். வெள்ளப்பணியாரம், கந்தரப்பம், ரவப்பணியாரம் எல்லாம் ஒன்று போல தோன்றினாலும், இவை எல்லாம் ஒரே தண்டிலிருந்து வந்த வேறுவேறு கிளைகள். எப்படி நியாண்டர்தல், ஹோமோசேப்பின்ஸ் (இவை எல்லாம் என்ன? என்று கேட்டால் கூகிளாரை கேட்கவும்) எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்த வெவ்வேறு கிளைகளோ அதைப்போல. 

இந்த பணியாரத்தை  செய்வதற்கு பொறுமையும் கவனமும் தேவை. பச்சரிசியோடு  கொஞ்சம் குறைவான உளுந்தோடு ஊற வைத்து மாவு பொங்க பொங்க ஆட்ட வேண்டும். பிறகு மிதமான சூடான எண்ணெயில் ஒரு கரண்டி மாவை ஊற்றிவிட்டு வெந்து விட்டதாவென சோதித்து, சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். எண்ணெய் சற்று சூடேறி விட்டாலோ அல்லது அதிகமாக மொறுமொறு என்று வெந்து விட்டாலோ, இந்த பலகாரத்தின் பெயரை அதற்கு வைக்க முடியாது. சரி, சற்று முன்னதாக வேகுமுன் எடுத்துவிட்டால், அதை பிய்த்துப் பார்க்கும் போது, வெள்ளை மாவு வெளியே வந்து, செய்தவரின் முகத்தில் அசடு வழிய வைக்கும். எனவே கவனமும் பொறுமையும் அவசியம்.

அப்புறம், மனைவி செய்து கொடுக்கும்போது சாப்பிட்டுவிட்டு "எங்க அம்மா செய்ற மாதிரி இல்லே" என்று சொன்னால், அப்புறம் அடுத்த தீபாவளிக்கு கூட வெள்ளப் பணியாரம் கெடைக்காது வெறும் அல்வா தான்.. அதனால "ருசியில எங்க அம்மாவ மிஞ்சிருவ போல.." என்று சொன்னால் அடிக்கடி ருசிக்க வழியுண்டு.

நாக்கு தான் எல்லாத்துக்கும் காரணம், சாப்பாடோ வாழ்வோ ருசிக்க...